மதுரை: பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கில், பிற கட்சிகள் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.
இதையடுத்து, அதிமுக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தவெக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், சவுந்தர் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது, பட்டா நிலங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. அரசு தரப்பில், “கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசு தயாராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தை பொது நலனுடன் அணுகுகிறோம். எனினும், இதற்கு தனி வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும்.
நடிகர்கள், அரசியல் கட்சித் தொண்டர்கள் 60 அடி உயரத்துக்கு கட்-அவுட் வைத்து, அதற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். எனவே, கட்-அவுட்கள் அமைப்பதற்கும் உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்த வழக்கில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ள கட்சிகள், அமைப்புகள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த பதில் மனுவை அரசு தரப்புக்கும் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பூங்கா போன்ற பொது இடங்களில் கொடிக் கம்பங்களுக்கு தனி இடம் ஒதுக்குவதற்கான வாய்ப்பு குறித்தும் அரசு தெரிவிக்க வேண்டும். விசாரணை ஆக. 13-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.