பொது வெளியில் சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால் நடவடிக்கை: எஸ்சி, எஸ்டி ஆணையம் எச்சரிக்கை | Action for use of word Sandalar in public SC ST Commission warning

1280371.jpg
Spread the love

சென்னை: இழிவுபடுத்தும் நோக்கிலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக உள்ளன. தங்களின் சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதும் சாதிகள், அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளை செய்யும், சமூக குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாட பயன்படுத்துவதும், கலை இலக்கியங்கள், திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், திரைப்பட பாடல்களிலும் அப்பெயர்களை பயன்படுத்துவதும் பரவலாக உள்ளது.

இது, இப்பெயர்களில் உள்ள மக்களை புண்படுத்துவதாகும். தவிர இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணமும் பொதுமக்களிடம் இல்லை.

மேலும்,பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழகத்தின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48-வது இடத்தில் உள்ளது. அண்மைக்காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொது வெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது.

எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *