இந்த மாளிகையில் தான் பலருக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கக்கூடிய சம்பவங்கள் நடந்தேறியது. சோழ மகா சரித்திரம் இந்த சம்பவங்களுக்குப் முன் பின் என இரண்டாக வகுக்கப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மிக முக்கிய சம்பவமான ஆதித்த கரிகாலனின் மரணம் தான் கதையின் மையப்புள்ளி. பின்பு அருண்மொழித் தேவன் பட்டத்திற்கு வருவது மீதிக்கதை.
ஆதித்தனின் மரணம் நடந்தேறிய அன்று இரவு அங்கே ரவிதாசன் மட்டுமன்றி நந்தினி மணிமேகலை வந்தியத்தேவன் பெரிய பழுவேட்டரையர், சம்புவரையர் என எல்லோருமே அங்கே இருந்தார்கள்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை.
இந்த கொலையை செய்தது யார்?
மேலே குறிப்பிட்டதைப் போல நந்தினியா, ரவிதாசனா மணிமேகலையா பெரிய பழுவேட்டரையரா, அல்லது தனக்கே பட்டம் கட்ட வேண்டும் என்ற பேராசையில் இருந்த உத்தம சோழன் என்னும் மதுராந்தகனா அன்றி அவனைப் பெற்ற செம்பியன் மாதேவியா, குந்தவையின் தூண்டுதலினால் அருண்மொழிவர்மனா அல்லது வந்தியத்தேவனா என்று பல கேள்விகளை பல வரலாற்று ஆசிரியர்கள் முன் வைத்துள்ளனர்.
இதன் பதிலாக தான் ஆனந்தீஸ்வரர் கோயிலில் காணப்பட்ட கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்ற ஒரே ஒரு ஆதாரம். உடையார்குடி கல்வெட்டு மிகவும் ஆதாரபூர்வமான ஒன்று.
உடையார்குடி கல்வெட்டு, ஆனந்தீஸ்வரர் கோயில், காட்டுமன்னார்கோயில் ”பாண்டியன் தலை கொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான முன்குடுமி அந்தணர்கள் எனப்படும் கேரள அந்தணர்களும் வீரபாண்டியனுக்கு மிகவும் நெருக்கமானவர்களுமான சோமன், தம்பி ரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரம்மாதி ராஜனும், இவன் தம்பி பரமேஸ்வரன் பிரம்மாதிராஜனும், இவர்கள் உடன் பிறந்த மலையனூரானும் சகோதரர்கள் அவர்கள் உறவினர்கள், இவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள், இவர்களிடம் பெண் எடுத்தவர்கள் மட்டுமல்லாது மாமன் மற்றும் பங்காளி முறையினர் என சுமார் முன்னூறு குடும்பத்தார் அனைவரின் சொத்துக்களையும் உடமைகளையும் விற்று அவர்கள் அனைவரையும் நாடு கடத்திட உத்தரவிட்டு ராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டில் ஒரு நிருபம் அனுப்பி வைக்கப்பட்டு அது இந்த கோயில் சுவற்றில் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.