பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக டிஎஸ்பி வழக்கு: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை | CBI probes former IG Pon Manickavel

1293669.jpg
Spread the love

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான பொய்வழக்கில் தன்னை கைது செய்திருப்பதாக டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில், சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இவற்றில், 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை மீட்ட போலீஸார், அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்க உதவியதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்குதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிறப்பு உதவிகாவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில், இந்த வழக்குதொடர்பாக சென்னை பாலவாக்கத்தில் வசித்து வரும் பொன்.மாணிக்கவேல் வீட்டுக்கு நேற்று காலை டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பொன்.மாணிக்கவேலிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். முடிவில், மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்தால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: என்னிடம் வழக்கு தொடர்பான பல முக்கியஆவணங்கள் இருந்தன. அவற்றைமுன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரியிடம் கொடுக்கமுடியவில்லை. தற்போது, புதிதாக வந்திருக்கும் விசாரணை அதிகாரியிடம்,அந்த ஆவணங்களையெல்லாம் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். சிலைக் கடத்தல் வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் அதிகாரியாக பொறுப்பேற்றேன். ஆனால், நான் பொறுப்பேற்கும் முன்பு வரை சிலை கடத்தல் தொடர்பாக வெளிநாடுகளில் எந்தவித சோதனையும் நடத்தவில்லை. எந்த ஒருகுற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. நான்தான் ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறேன்.

தற்போது குற்றவாளிகள் அனைவரும் ஒன்று சேருகிறார்கள். மீண்டும் பழைய சிலை கடத்தல் வியாபாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு, நான் தொடுத்த வழக்குகள் அனைத்தையும் நீர்த்து போக வைக்க எனக்கு தொந்தரவு கொடுக்க நினைக்கிறார்கள். எனக்கு யாரும் தொந்தரவு கொடுக்க முடியாது. நான் பல வழக்குகளை தொடுத்திருக்கிறேன்.

நான் தொடுத்த வழக்குகளில்இன்னும் குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அப்படி தாக்கல் செய்தால், ஒரு முன்னாள் டிஜிபி இந்த வழக்கில் சிக்குவார். அதேபோல், சர்வதேச அளவில் பலரும், மிகப்பெரிய தொழிலதிபரும் இந்த வழக்குகளில் சிக்குவார்கள். நான் அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் யாரையும் விடப்போவதில்லை. எனக்கு எதிராக சிலை கடத்தல் குற்றவாளிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *