சமீபத்தில், கடவுள் தேசத்தைச் சேர்ந்த ஆன்மிக மடத்தின் நிர்வாகிகளை, மலர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள். தேர்தலையொட்டி பெரும் ‘உதவிகள்’ பேசப்பட, ‘ஆட்சி மாறினால் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் உதவிக்கு சம்மதித்திருக்கிறதாம் அந்த மடம். இதில் பஞ்சாயத்தே, மடத்தின் உதவிகளைக் யார் கையாள்வது என்பதில்தான் வெடித்திருக்கிறது.
மத்திய சென்னையிலுள்ள மலர்க்கட்சியின் முக்கியப் புள்ளி, ‘நான் பார்த்துக் கொள்கிறேன்…’ என்று கையைத் தூக்குகிறாராம். அவர் முன்னாள் ஆளுநரின் ஆள் என்பதால், பொறுப்பை ஒப்படைக்கத் தயங்குகிறாராம் மலர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். ‘இந்த உதவிகளை கையாண்டாலே போதும், பெரியளவில் பலனடைந்துவிடலாம்’ என்று கணக்குப் போட்டு, டெல்லி மக்கள் பிரதிநிதி மற்றும் முன்னாள் ‘பெல்’ மாஜியின் ரூட்டில் சிபாரிசுக்காக முட்டிமோதுகிறாராம் அந்த முக்கியப் புள்ளி.