பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்!

Spread the love

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இர்ஷாத் என்பவர் சாம்ராவட்டத்தில் நடத்தி வந்த படிப்புக்காக வெளிநாட்டுக்கு ஆட்சேர்க்கும் நிறுவனத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி போலீஸார் அதிரடியாக ஆய்வு செய்தனர். அதில், வெவ்வேறு இடங்களுக்கு கூரியர் மூலம் அனுப்புவதற்காக வைத்திருந்த சுமார் 100 போலி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விரிவாக விசாரணை நடத்தியதில் பொள்ளாச்சியில் வைத்து போலி சான்றிதழ்கள் பிரிண்ட் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், பொன்னானியில் வைத்து பணம் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. பொன்னானியில் போலீஸார் நடத்திய விசாரணையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட போலி சீல்-கள், துணை வேந்தர்களின் சீல்கள், அதி நவீன கம்ப்யூட்டர்கள், பிரிண்டிங் மிஷின்கள் மற்றும் சுமார் ஒரு லட்சம் போலி சான்றிதழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

போலி சான்றிதழ்கள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்தவர்கள்

போலி சான்றிதழ்கள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்தவர்கள்

இந்த கும்பலுக்கு தலைவன் என கருதப்படும் மீனடத்தூர் பகுதியைச் சேர்ந்த தனீஷ் தர்மன்(38), பொன்னானி இர்ஷாத்(39), ராகுல்(30), பய்யனங்காடி அப்துல் நிஷார்(31), நெடுமங்காட்டைச் சேர்ந்த ஜஸீம்(31), ரதீஷ்(37), ஷபீக் (37) தமிழ்நாட்டின் சிவகாசியைச் சேர்ந்த ஜமாலுதீன்(40), வெங்கடேஷ் (24), விருதுநகரைச் சேர்ந்த அரவிந்த்குமார் (24) ஆகியோர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் போலி சான்றிதழ்களுக்கான ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்துவந்தது தெரியவந்தது. முக்கிய குற்றவாளி என கருதப்படும் தனீஷ் தர்மனுக்கு திரூரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா, புனேவில் இரண்டு ஐந்து நட்சத்திர பார்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள வணிக நிறுவனமும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அவர் நடத்திவருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தனீஷ் தர்மன் தனது பெயரை டானி எனக்கூறிக்கொண்டு போலி சான்றிதழ் தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *