பொள்ளாச்சி: ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலை இன்று காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
ஆனைமலை அடுத்த பாலாற்றின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் இங்கு சனிக்கிழமை மற்றும் அனைத்து தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலுக்கு இரவு நேரத்தில் இரண்டு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை முதல் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சிற்றோடைகள் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
கோயிலில் இரவு காவலர்களாக பணியாற்றி வரும் மகாலிங்கம் (60) ஜெயக்குமார் (58) ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சுதாரித்துக் கொண்ட இரவு காவலர்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்து தீயணைப்பு துறை வீரர்கள், நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் கயிறு கட்டி கரைக்கு அழைத்து வந்தனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கோயில் ஆற்றின் மையப் பகுதியில் இருப்பதால் இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு புதியதாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.