சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு தொடங்கியுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஓய்வூதியர்களின் பிரச்சினையை பேச வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையானது, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் இன்று (ஆக.27) நடைபெற்றது.
இதில், அரசு தரப்பில் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, நிதித்துறைச் செயலர் அருண் சுந்தர் தயாளன், ஒப்பந்த கூட்டுநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோரும், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்கள் சார்பில் கி.நடராஜன், தர்மன், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு, கே.ஆறுமுகநயினார், வி.தயானந்தம், ஆர்.ஆறுமுகம், முருகராஜ், கே.வெங்கடேசன், டி.வி.பத்மநாபன், திருமலைச்சாமி, வெ.அர்ச்சுணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதில் விவாதிக்கப்பட்டவை குறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: “முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுகக் கூட்டமாக நடைபெற்றது. எனினும், சங்கங்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக முன்வைத்தோம். பெரும்பான்மையான சங்கங்கள் கையெழுத்திட்டால் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது விதிமுறை. கடந்த முறை 60-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில், தற்போது சங்கங்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது. எனவே, மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை தொமுச உள்ளிட்ட சங்கங்கள் வலியுறுத்தின.
இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் அண்ணா தொழிற்சங்கம் தலைமையிலான கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு விரைவில் அழைப்பதோடு, அதில் முதன்மையாக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட விஷயங்களை பேசி தீர்க்க வேண்டும் என சிஐடியு உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பேச்சுவார்த்தையில் பொதுவான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கூட்டங்களில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.