போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஎம் தீர்மானம் | CPM Urges TN Govt to Address Transport Workers’ Demands

1377021
Spread the love

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 செப்டம்பர் 18,19 தேதிகளில் கோவில்பட்டியில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வு கால பலன்கள் வழங்கப்படுவதில்லை. இப்போதைய நிலையில் 16 மாத காலம் ஓய்வு கால பலன்கள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.

பணி காலத்தில் தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி பணம் உரிய கணக்குகளில் செலுத்தப்படுவதில்லை. பணிக்கொடை டிரஸ்ட்டுக்கும் பணம் செலுத்தப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கும் பல்வேறு நிலுவைகள் உள்ளன. ஒட்டு மொத்தத்தில் ரூ.15000 கோடி தொழிலாளர்கள் பணம் கழக நிர்வாகத்தால் செலவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதற்கு இதுவே அடிப்படை காரணமாகும்.

01.04.2003க்கு பின் பணிகளில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது அது நிறைவேற்றப்படவில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 18.08.2025-ம் தேதி முதல் சிஐடியு சார்பில் 22 மையங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காத்திருப்பு போராட்டத்தை ஒட்டி கடந்த 01.09.2025 ம் தேதி சிஐடியு தொழிற்சங்க தலைவர்களை அழைத்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசினார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பயன்கள் தீபாவளிக்கு முன்பாக வழங்க அரசு முன்வர வேண்டும், தொழிலாளர்களின் ஒப்பந்த நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது சம்பந்தமாக தொழிற்சங்கங்களோடு அரசு விவாதிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் சேர்க்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் வலியுறுத்தினர். தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நிதித்துறையுடன் பேசிவிட்டு தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி 32 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *