சென்னை தி.நகருக்கு அடுத்தபடியாக தென் சென்னையில் குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலை, வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இச்சாலையில் கடந்த 15 ஆண்டுகளில் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் வணிக நிறுவனங்கள் அதிகரித்திருந்தாலும் பெரும்பாலான கடைகளில் பார்க்கிங் வசதி இல்லை.
இந்த வணிக நிறுவனங்களுக்கு கட்டிட அனுமதி கொடுக்கும்போதே, பார்க்கிங் வசதி அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பார்க்கிங் வசதிக்கு ஒதுக்கப்பட வேண்டிய பகுதிகளில் வணிக நிறுவனங்களால் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை – பல்லாவரம் வரையிலான 2 கி.மீ. தூரத்தில் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர்.
இதன் காரணமாக ‘பீக்-ஹவர்’ நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசர கால வாகனங்கள் கூட செல்ல வழி கிடைப்பதில்லை. தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சிஎம்டிஏ, நிர்வாகம் இணைந்து, பார்க்கிங் வசதிக்கு அனுமதி பெற்றுள்ள இடங்களில் கடைகள் அமைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் பார்க்கிங் வசதி அமைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் கூறியது: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை, பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக உணவகங்களில் பார்க்கிங் வசதி இருந்தும், அந்த பார்க்கிங் இடத்தை தங்கள் வணிக நிறுவனத்துக்கு பயன்படுத்திக் கொண்டு, வாகனங்களை சாலையில் நிறுத்த சொல்கின்றனர். பார்க்கிங் வசதி இல்லாத உணவகத்துக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. பெரும்பாலான உணவகங்கள் பார்க்கிங் வசதியே இல்லாமல் செயல்படுகிறது.
அனைத்து கட்டிடங்களிலும் பார்க்கிங் வசதி இருப்பதாக மாநகராட்சி வசம் ஆவணங்களை வழங்கி அனுமதி மட்டும் பெற்றுள்ளனர். உணவகம், வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். தாம்பரம் மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து அனைத்து வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்து வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்வதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.