போடி: மழைநீரால் அரிக்கப்பட்ட போடிமெட்டு மலைச்சாலையின் அடித்தளப் பகுதிகள் குழிகளாக மாறிவிட்டன. இப்பகுதியை கடக்கும் போது வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததாலும் வாகனங்கள் பாதுகாப்பற்ற நிலையிலே சென்று வருகின்றன.
தமிழகம் கேரளத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. இச்சாலை போடி முந்தலில் இருந்து 20 கிமீ. தூரம் வரை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. இச்சாலையின் ஒருபக்கம் சரிவும், மறுபக்கம் உயர்ந்த பாறைகளாகவும் உள்ளன. மழைக் காலங்களில் நீர் வழிந்தோட பல இடங்களிலும் உரிய வசதி இல்லை. இதனால் மழைநீர் சாலையின் ஓரங்களிலே பெருக்கெடுத்துச் சென்று அரிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தரைப்பாலங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் பக்கவாட்டிலும் சாலையின் மேல் தளத்திலும் செல்கின்றன. இதனால் சாலையின் அடித்தளத்தில் வெகுவாய் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 11வது கொண்டை ஊசி வளைவு சாலையின் கீழ் பகுதி வெகுவாய் அரிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பார்ப்பதற்கு சாலை போல தெரிந்தாலும் அதன் அடிப்பகுதி ஆபத்தான குழிகளாக உள்ளது. இந்த இடத்தில் வாகனங்கள் செல்லும் போது அதன் எடை தாங்காமல் வாகனம் இதில் சிக்கிக் கொள்ளும் நிலை அபாயம் உள்ளது.மேலும் 5-வது கொண்டை ஊசி வளைவில் பல மாதங்களாகவே தடுப்புச் சுவர் இல்லாத நிலை உள்ளது. இங்கு ஆபத்தான பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. எதிரெதிரே வாகனங்கள் வரும் போது இப்பகுதியில் வாகனங்கள் ஒதுங்கினால் சரிந்து விழும் நிலை உள்ளது. குறிப்பாக இரவுப் பயணம் அபாயகரமானதாக இருக்கிறது.
பொதுவாகவே மலைச்சாலைப் பயணம் வாகன ஓட்டிகளுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. மூடுபனி உள்ளிட்ட பார்வையை மறைக்கும் பல விஷயங்களை கடந்தே வாகனங்கள் சென்று வருகின்றன. ஆகவே இதுபோன்ற ஆபத்தான இடங்களை சரி செய்து பாதுகாப்பான வாகன இயக்கத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “வனத்துறை அனுமதி பெற்றே சாலைப்பணிகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. விரைவில் இப்பகுதிகள் சரி செய்யப்படும்,” என்றனர்.