செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கான கூகுள் நிறுவனத்தின் ‘ப்ளே-ஸ்டோா்’ தளத்தில் அந்த நிறுவனத்தின் போட்டியாளா்களுடைய செயலிகளையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதள விளம்பர சேவை, தேடல் செயலி, கணினி மென்பொருள், இணையதள வா்த்தகம், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளித்துவரும் கூகுள், உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையைப் பயன்படுத்தி, பிற போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் செய்து துறையில் ஏகபோக உரிமையை கூகுள் நிலைநாட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, அறிதிறன் பேசிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருளுடன் இயங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கும் செயலிகளை வாடிக்கையாளா்கள் பதிவிறக்கம் செய்வதற்கான ‘ப்ளே-ஸ்டோா்’ தளத்தில் அமெரிக்காவின் ஏகபோக உரிமை தடுப்புச் சட்டத்துக்கு எதிராக தங்களது போட்டி நிறுவனங்களின் செயலிகளை வடிகட்டும் தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்திவருகிறது.
இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் டொனாடோ, கூகுள் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தாா். மேலும், அந்த வடிகட்டும் தொழில்நுட்பத்தை ப்ளே-ஸ்டோரில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கூகுளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
அத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு 12 முதல் 16 மாதங்கள் வரை தேவைப்படும் என்று கூகுள் தரப்பு கோரியது. எனினும், வரும் நவம்பா் இறுதிக்குள் தனது உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி கெடு விதித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆண்ட்ராய்ட் அறிதிறன் பேசி வைத்திருக்கும் வாடிக்கையாளா்களுக்கு கூகுள் நிறுவனப் போட்டியாளா்கள் உருவாக்கியுள்ள பயனுள்ள செயலிகளும் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.