சென்னை: “தமிழகத்தின் இளைய தலைமுறையை ஒட்டுமொத்தமாக போதையில் ஆழ்த்திட சதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து இளைஞர் முன்னணி அமைப்பு, “உச்சகட்ட அளவில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதால், தேசிய விசாரணை அமைப்பான என்சிஏ முழுவீச்சில் தமிழகத்தில் களமிறங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்த துணை நடிகையான எஸ்தர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகனும், கடமான்பாறை திரைப்படத்தின் நடிகருமாகிய அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஓஜி கஞ்சா (ஒரிஜினல் கேங்ஸ்டர்) என்ற உயர் ரக போதைப் பொருள் மற்றும் கஞ்சா ஆயில் போன்றவற்றை திரை பிரபலங்களுக்கு விற்பனை செய்த கும்பலான பாசில் அகமது, முகமது ரியாஸ், சையது ஜாகி, யோகேஷ் போன்றவர்களோடு மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான் தொடர்புள்ளவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கைதுக்கு பின்னர் மகனை சந்தித்த மன்சூர் அலிகான் பொறுப்பற்ற முறையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய் வருவது போல போய்வா என்று அறிவுரை கூறுவதுடன், ‘தமிழக அரசு மதுபானத்தை குடித்தால் தவறில்லை, கஞ்சா அடித்தால் தவறா?’ என்று தன் மகனது செயலை நியாயப்படுத்தி பேட்டி கொடுக்கிறார். இதைப் பார்க்கும்போது இவர் மீதும் மக்கள் சந்தேகப்படுவதில் தவறில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தில் ஜாபர் சாதிக்கை தொடர்ந்து சினிமா பிரபலங்களான அமீர் உட்பட பலர் போதைப் பொருள் மாபியாக்களுடன் தொடர்பில் உள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது. தமிழகத்தின் இளைய தலைமுறையைக் காக்க, சட்டவிரோத போதைப்பொருள் சப்ளை செய்யும் வேலையில் இதுபோன்ற நபர்கள் ஈடுபடுவதை தடுக்க, போதைப் பொருள் தடுப்பு முனையமான என்சிபி நேரடி விசாரணையில், களத்தில் இறங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.