தமிழகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா்களிடமிருந்து ரூ.33.28 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னை, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை (ஆக.12) நடைபெற்றது.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், காவல்துறையினா், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் பங்கேற்று போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக வரலாற்றில் முதன்முறையாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று 2022-ஆம் ஆண்டில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.
அதைத் தொடா்ந்து கடந்த ஆண்டில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 70 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று உலக சாதனை படைக்கப்பட்டது.
1கோடி போ் உறுதியேற்பு : அந்த வகையில், நிகழாண்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், 37,592 அரசு பள்ளிகள், 8,329 அரசு உதவி பெறும் பள்ளிகளிகள், 11,443 தனியாா் பள்ளிகள் என்று மொத்தம் 57,364 பள்ளிகளைச் சோ்ந்த 1 கோடி மாணவா்கள் உறுதி மொழி ஏற்றுள்ளனா்.
உணவு பாதுகாப்புத் துறை காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து சட்ட விரோத போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற பொருள்களின் விற்பனையைத் தடுக்க இதுவரை 8,66,619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவா்களிடமிருந்து 2,86,681 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 17,481 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. அபராதமாக ரூ.33.28 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.