சென்னை: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பல்வேறு வகையிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மேலும், இதில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்ததால், அமலாக்கத் துறை அதிகாரிகள் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிடோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். அந்த வகையில், நடிகர் ஸ்ரீகாந்த் அக்டோபர் 28-ம் தேதியும், நடிகர் கிருஷ்ணா 29-ம் தேதியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகவில்லை. வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கிருஷ்ணா நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரானார்.
அப்போது அவரிடம், “நீங்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது உண்மை தானா? யாரிடம் இருந்தெல்லாம் வாங்கினீர்கள்? யாருக்கெல்லாம் கைமாற்றினீர்கள்? இதற்காக எவ்வளவு தொகை கைமாறியது? கைமாறிய தொகையை என்ன செய்தீர்கள்” என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில்களை எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். பின்னர், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர். இந்த விசாரணை நேற்று காலை முதல் இரவு வரை நீடித்தது.