சென்னை: போதைப் பொருள் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானார். போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். முன்னதாக போலீஸாரின் விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் அதிகளவில் பணம் கொடுத்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் கடந்த அக்.28-ம் தேதியும், கிருஷ்ணா 29-ம் தேதியும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை பெற்றுக்கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், உடல் நலனைக் காரணம் காட்டி வேறு ஒரு நாளில் ஆஜராக வாய்ப்பு தர வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்தார். அதேசமயம் கடந்த 28-ம் தேதி நடிகர் கிருஷ்ணா அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
பின்னர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத் துறை 2-வது முறையாக அண்மையில் சம்மன் அனுப்பியது. இதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீகாந்த் நேற்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் எழுத்துப் பூர்வமாகவும், வீடியோ வடிவிலும் பதிவு செய்து கொண்டனர். விசாரணை இரவிலும் நீடித்தது.