இத்தாலியின் வாடிகன் நகரில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீகுமார், தனியாக போப் பிரான்சிஸை சந்தித்து ரிக் வேத நூலை வழங்கினார்.
சா்வமத மாநாட்டின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, சிவகிரி மடத்தின் மூலம், உலக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைமையகமான வாடிகன் நகரில் 3 நாள் உலக மத மாநாடு நடைபெற்றது.
இதில், அமெரிக்காவிலுள்ள இந்து மக்களுக்கான கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ குமார் கலந்துகொண்டார்.
பின்னர் போப் பிரான்சிஸை சந்தித்த அவர், ரிக் வேத நூலின் பிரதியை பரிசாக வழங்கினார். அதனை போப் பிரான்சிஸ் பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பாக ஸ்ரீகுமார் பேசியதாவது,
”மார்க்சிஸ்க் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் கேரள மாநில முன்னாள் முதல்வருமான எ.கே. நாயனார், 1997ஆம் ஆண்டு வாடிகன் வந்தபோது போப் இரண்டாம் ஜான் பாலுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கினார். இந்தமுறை வாடிகன் வந்துள்ள நான், போப் ஆண்டவருக்கு ரிக் வேத நூலை வழங்குவதே பொருத்தமான பரிசாக இருக்கும் எனத் தோன்றியது. ரிக் வேத நூல் இந்து மத தத்துவத்தின் சாரம்சத்தை வெளிப்படுத்துகிறது.
என்னுடைய பரிசை இன்முகத்தோடு போப் பிரான்சிஸ் பெற்றுக்கொண்டார். புத்தகத்தைப் பெறும்போது ’இந்தப் பரிசு எனக்கா?’ என புன்னகையோடு கேட்டார்” எனக் குறிப்பிட்டார்.