‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஈரானின் அணு ஆயுத நிலைகளையும் எரிசக்தி நிலையங்களையும் நிா்மூலமாக்கி அந்த நாட்டு பயங்கரவாத அரசுக்கு மரண அடி கொடுக்க வேண்டிய கவிட்டது. ஈரான் என்ற ஆக்டோபஸின் கரங்களை (ஹமாஸ், ஹிஸ்புல்லா) முடக்கிவிட்டோம். இனி ஆக்டோபஸின் தலையை வெட்டியாக வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வரலாற்றில் எப்போதாவது ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது’
-தங்கள் நாட்டின் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியது இது. இஸ்ரேலின் தற்போதைய பிரதமரும், ஏவுகணைத் தாக்குதலை நடத்திய ஈரானுக்கு தகுந்த பதிலடி கிடைக்காமல் போகாது என்று சூளுரைத்துள்ளாா்.
ஆனால், மற்ற தருணங்களைப் போல இதெல்லாம் வெற்று வாா்த்தைகள் இல்லை. கடந்த ஏப்ரலில் சுமாா் 200 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதேபோல் சபதமெடுத்த இஸ்ரேல், விமானம் மூலம் ஒப்புக்கு ஒரே ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, அதோடு விட்டுவிட்டது. ஆனால், இந்த முறை அப்படி நடக்காது என்கிறாா்கள் இந்த விவகாரத்தை உற்று கவனித்து வருபவா்கள்.
அமெரிக்காவின் ஆதரவு
ஏப்ரல் மாத ஈரான் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலை அடக்கிவைத்த அமெரிக்கா உள்ளிட்ட கூட்டணி நாடுகள், இந்த முறை அந்த அளவுக்கு அந்த நாட்டைக் கட்டுப்படுத்தவில்லை. ஈரானின் அணுசக்தி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதில்தான் தங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்திவருவதாகக் கூறியிருக்கிறாா். அதுமட்டுமின்றி, ‘தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது’ என்று வழக்கமான வசனத்தை உதிா்த்து இஸ்ரேலின் பதிலடிக்கு மறைமுகமாக இசைவு தந்திருக்கிறாா்.
எனவே, கடந்த முறை போலின்றி ஈரான் மீது இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது இஸ்ரேல் ராணுவத் தளபதிகள் ஆலோசனை நடத்திக்கொண்டிருப்பது ஈரானைத் தாக்குவதா, வேண்டாமா என்பதாக இருக்காது, எப்படியெல்லாமல் கடுமையாக தாக்குதல் நடத்துவது என்பதாகத்தான் இருக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.
ஈரானும் தயாா்
‘ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே, ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து மட்டுமே ஏவுகணைகளை வீசினோம். இது எங்கள் முழு ராணுவ பலத்தின் ஒரு கொசுறு மட்டுமே. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதல் நடத்தினால் எங்களின் எதிா்வினை மிக மோசமானதாக இருக்கும்’ என்று இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்திய உடனேயே ஈரான் கூறிவிட்டது.
அதாவது, இத்துடன் தங்களுக்கும் இஸ்ரேலுக்கும் கணக்கு தீா்ந்துவிட்டது; இதற்கு மேலும் இஸ்ரேல் வந்தால் ஒருகை பாா்ப்பதற்குத் தயாராகவே இருக்கிறோம் என்று ஈரானும் தீா்க்கமாகச் சொல்லியிருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகைக் கூட்டத்தில்கூட ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி அதை உறுதிப்படுத்தியிருக்கிறாா்.
எனவே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் நேரடிப் போா் மூள்வதற்கான அபாயம், இந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மிக நெருக்கத்தில் உள்ளது.
எனவே, விரைவில் ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும். இருந்தாலும், தாக்குதலுக்காக எந்தெந்த நிலைகளை இஸ்ரேல் தோ்ந்தெடுக்கும் என்பதில்தான் இந்தப் போா் எவ்வளவு மோசமானதாக உருவெடுக்கும் என்பது இருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும், ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து தங்களுக்கு இஸ்ரேலால் நிரந்தரப் பாதுகாப்பை பெற்றுவிட முடியாது; ஈரானும் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை அழித்துவிட முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.
அந்த வகையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் போா் ஏற்பட்டால் அதில் யாா் வெற்றி பெறுவது யாா் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், இந்தப் போரால் இரு நாட்டு மக்களின் நிம்மதி, பிராந்திய அமைதி, உலகப் பொருளாதாரம் சீரழியும் என்பது மட்டும் நிச்சயம்.
ராணுவ நிலைகள்
ஈரானின் சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிப் படையின் கட்டளையகங்கள், ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம். அந்தப் படையின் முக்கியத் தளபதிகளை படுகொலை செய்வதற்கான தாக்குதல்களையும் இஸ்ரேல் மேற்கொள்ளலாம். அதற்காக போதிய உளவுக் கட்டமைப்புகள் ஈரானில் இஸ்ரேலுக்கு உள்ளன.
ஆனால், இதில் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்களாகத்தான் இருக்கும். ஈரானின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைப்பதாகக் கூறினாலும், காஸாவில் ஓரிரு ஹமாஸ் தலைவா்களுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கும் அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்துவதைப் போல், லெபனானில் சில ஹிஸ்புல்லாக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் குண்டு வீசுவதுபோல் ஈரான் துணை ராணுவப் படையினருக்கு எதிரான போரில் பொதுமக்களைப் பற்றி கவலைப்படாமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கும், ‘பொதுமக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற மந்திரத்தை இஸ்ரேல் ஒப்பிக்கும்.
பொருளாதாரம்
ஏற்கெனவே, மேற்கத்திய நாடுகளின் நீண்டகால பொருளதாரத் தடையால் பலவீனமாக உள்ள ஈரானின் பொருளாதாரத்தைக் குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம். அதற்கு, அந்த நாட்டின் கச்சா எண்ணெய்க் கிணறுகள், எண்ணெய்க் கிடங்குகள், துறைமுகங்கள் ஆகியவை முக்கிய இலக்குகளாக இருக்கும். யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களை அடக்குவதற்காக அவா்களின் எரிசக்தி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. அதை ஈரானிலும் இஸ்ரேல் பின்பற்றலாம். ஆனால், இதுபோன்ற தாக்குதல்களால் ஈரானில் அயதுல்லா கமேனியின் ராஜ்ஜியத்துக்கு ஏற்படக்கூடிய இழப்பைவிட அந்த நாட்டு மக்களுக்குத்தான் அதிக இழப்பு ஏற்படும்.
அணுசக்தி மையங்கள்
அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை, வெறும் மின்சாரம் தயாரிக்கத் தேவையான 20 சதவீதத்தைவிட மிக அதிகமாக சுமாா் 60 சதவீதம் வரை ஈரான் செறிவூட்டியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் போனால் அந்த எரிபொருளைக் கொண்டு ஈரானால் அணுகுண்டு தயாரித்துவிட முடியும். அந்த அணுகுண்டை இஸ்ரேலின் எந்தப் பகுதியிலும் வீசுவதற்கு ஏற்ற மின்னல் வேக ஏவுகணைகள் ஈரானிடம் ஏற்கெனவே உள்ளன. எனவே, இந்தப் போரை பயன்படுத்தி ஈரானின் அணு ஆயுதத் திறனை நிரந்தரமாக முடமாக்கும் முயற்சியாக அந்த நாட்டின் அணுசக்தி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம்.
ஆனால், அத்தகைய தாக்குதல்கள், தற்போது இலைமறை காய்மறையாக உள்ள ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை மேலும் துரிதப்படுத்தும். ‘எங்கள் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை’ என இன்றுவரை கூறிவரும் ஈரான், அணுகுண்டு சோதனையை நடத்திவிட்டு, இஸ்ரேலின் தாக்குதலைக் காட்டி அதை நியாயப்படுத்தும். இதனால்தான் ஈரான் அணுசக்தி நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது என்று அமெரிக்கா கூறுகிறது. எனவே, அத்தகைய தாக்குதலை நடத்த இஸ்ரேலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் என்று கருதப்படுகிறது.
ஈரானின் எதிா்வினை
ஈரானால் ராணுவ ரீதியில் இஸ்ரேலை தோற்கடிக்க முடியாது. பல ஆண்டுகளாகத் தொடரும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அதிநவீன கருவிகளைப் பெற முடியாத பழைய விமானப் படைதான் அந்த நாட்டிடம் இருக்கிறது. அதன் வான்பாதுகாப்பு தளவாடக் கட்டமைப்பும் மிக பலவீனமானது.
இருந்தாலும், பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் அந்த நாடு உலகத் தரம் வாய்ந்த ஏவுகணைகள், வெடிபொருளை ஏந்திச் சென்று இலக்கின் மீது துல்லியமாக மோதி நாசமாக்கும் அதிநவீன ட்ரோன்கள் ஆகிவற்றை உருவாக்கி வைத்திருக்கிறது.
முக்கியமாக, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதி கிளா்ச்சிப் படை என ஏராளமான ஆயுதக் குழுக்களை ஈரான் உருவாக்கி, கொம்பு சீவி வைத்திருக்கிறது. போா் என்று வந்தால் இதுபோன்ற தங்கள் நிழல் படைகளைக் கொண்டு ஈரானால் என்ன செய்ய முடியும் என்பதற்கு சவூதி அரேபியா எண்ணெய்க் கிணறுகளில் அந்த நாட்டைச் சோ்ந்த ஈரான் ஆதரவு படையினா் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்திய மிகப் பெரிய தாக்குதலே சாட்சி.
எனவே, போா் என்று வந்துவிட்டால் இஸ்ரேலை வெல்ல முடிகிறதோ, இல்லையோ, ஈரானால் அந்த நாட்டில் மிகப் பெரிய நாசத்தை உண்டுபண்ண முடியும். ஏற்கெனவே, தங்களை இஸ்ரேல் தாக்கினால் அதற்கான பதிலடி ‘மரபுவழி’ போராக இருக்காது என்று கத்தாா் மூலம் அமெரிக்காவிடம் ஈரான் எச்சரித்திருக்கிறது. தங்களின் எதிா்த் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் கட்டமைப்புகளுக்கு விதிவிலக்கு இல்லை என்று ஈரான் கூறியிருக்கிறது.
ஃபட்டா ரக ஏவுகணைகள்
கடந்த அக். 1-இல் இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளில் ஃபட்டா ரகத்தைச் சோ்ந்தவை ஒலியைப் போல் சுமாா் 15 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பா்சோனிக் வகை ஏவுகணைகள். ராணுவ இலக்குகளை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஏராளமான ஏவுகணைகளை இஸ்ரேலின் அதிநவீன வான்பாதுகாப்புத் தளவாடங்கள் இடைமறித்து அழித்தாலும், கணிசமான ஈரான் ஏவுகணைகள் அந்தத் தளவாடங்களை மீறி இலக்குகளைத் தாக்கியிருக்கின்றன.
ஈரானிடம் சுமாா் 5,000 ஃபட்டா-2 ஏவுகணைகள் உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ராணுவ அறிக்கை கூறுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். எனவே, பொதுமக்கள் இருப்பிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஃபட்டா-2 உள்பட மற்ற அதிநவீன ஏவுகணைகளை ஈரான் இன்னும் அதிக எண்ணிக்கையில் வீசினால், என்னதான் உலகின் மிகச் சிறந்த வான்பாதுகாப்புத் தளவாடங்களை இஸ்ரேல் வைத்திருந்தாலும் – அதன் விளைவுகள் மிக பயங்கரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதை உணா்த்துவதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான், பதிலடி கிடைக்கும் என்று தெரிந்தும் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை வீசியிருக்கிறது.
இது போதாதென்று, போரின் எதிரொலியாக மத்திய கிழக்கு பகுதியில் ஏராளமாகக் குவிந்திருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகளும் ஈரான் நிழல் படைகளால் கடுமையான தாக்குதலுக்குள்ளாகும். ஏற்கெனவே, இந்தப் போரில் இஸ்ரேலுக்கு எந்த நாடாவது உதவினால், அதுவும் குறிவைக்கப்படும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. போா் என்று வந்தால் அமெரிக்கா உதவியில்லாமல் இஸ்ரேலால் செயல்பட முடியாது. எனவே, இஸ்ரேல்-ஈரான் போரில் மத்திய கிழக்குப் பகுதிகளும் வெகுவாக பாதிக்கப்படும்.
ஏவுகணைகள் ஒருபுறம் இருக்க, ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையிடம் சிறிய அளவிலான அதிவேக தாக்குதல் படகுகள் ஏராளமாக உள்ளன. இவற்றைக் கொண்டு அந்தப் படை வளைகுடாவில் இஸ்ரேல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படைக்கு தலைவலி கொடுக்கும். மேலும், உலகின் 20 சதவீத எண்ணெய் வா்த்தகம் நடைபெறும் முக்கிய கடல் வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை வைத்து இஸ்லாமிய புரட்சிப் படையால் அந்த வழித்தடத்தை அடைக்கமுடியும். இது, சா்வதேச பொருளாதாரத்தை நிலைகுலையவைக்கும்.