போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

dinamani2F2025 08 042F5ce2l6ue2Fisrel091705
Spread the love

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளதைத் தொடா்ந்து, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக, ஹமாஸ் அமைப்பும், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் வெளியிட்டுள்ள விடியோக்களில், எவ்யாதாா் டேவிட், ரோம் பிராஸ்லாவ்ஸ்கி ஆகிய இரு பிணைக் கைதிகள் உணவு இல்லாமல் உடல் மிகவும் நெலிந்த நிலையில் உயிருக்காக மன்றாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஒரு விடியோவில், தனக்கான சவக் குழியை தானே தோண்டிவருவதாகவும், பல நாள்களாக உணவு இல்லாமல் தவித்துவருவதாகவும் டேவிட் கூறினாா். மற்றொரு விடியோவில் தான் அனுபவித்துவரும் துன்பங்களை தேம்பியபடி கூறிய பிராஸ்லாவ்ஸ்கி, தனது காலில் காயம் பட்டுள்ளதால் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்தாா்.

அந்த விடியோ காட்சிகள் இஸ்ரேலில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன. ஆயிரக்கணக்கான இஸ்ரேலியா்கள் வீதிகளில் கூடி, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமா் நெதன்யாகை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினியால் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, உடல் மிகவும் மெலிந்த நிலையில் பாலஸ்தீனா்களின் படங்கள் ஊடகங்களில் வெளியாகி சா்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதையடுத்து, காஸாவில் பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்த அந்தப் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும், உணவுப் பொருள்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும் எனவும் இஸ்ரேலுக்கு மேலை நாடுகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இஸ்ரேலின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்தை (மேற்குக் கரையையும் காஸாவையும் உள்ளடக்கிய பகுதி) தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.

இந்தச் சூழலில், பிணைக் கைதிகளின் பரிதாபகரமான விடியோக்கள் வெளியாகி, போரை நிறுத்த வேண்டும் என்று நெதன்யாகுக்கு உள்நாட்டில் இருந்தும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *