‘போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்க’ – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல் | DMK Govt Delays Paddy Procurement: Edappadi Palaniswami Condemns

1378989
Spread the love

சென்னை: போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகளை அலைக்கழிக்காமல், உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப் பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் விவசாயிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல், சாலை ஓரங்களில் நெல் மணிகளைக் குவித்து வைத்து, 15 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கொள்முதல் செய்த நெல்லை சேமித்து வைக்க போதிய இட வசதியும், சாக்குகளும் இல்லை என்பதால் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் காரணம் சொல்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேதனைகளை புரிந்துகொள்ளாமல், அவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்த ஃபெயிலியர் மாடல் அரசை கண்டிக்கிறேன்.

வேளாண் தொழிலுக்காக குடும்ப நகைகளையும், சொத்துக்களையும் அடமானம் வைத்து, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி, அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டு வரும் நெல் மணிகள், மழையில் நனைந்து முளைவிட்டு விடுமோ என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். ஆனால், அரசு விவசாயிகளின் அச்சத்தை துச்சமாக நினைத்து செயல்படுகிறது. ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால், கொள்முதல் நிலையங்களில் கூரைகள் அமைப்போம், கிடங்குகள் கட்டுவோம்’ என்று மார்தட்டிய இந்த அரசால், விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை கொள்முதல் கூட செய்ய முடியவில்லை; அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்கக் கூட முடியவில்லை.

ஏற்கெனவே, மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் அதிக அளவு கடன் வாங்கி திவாலாக உள்ள நிலைமையில், தற்போது திமுக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தையும் பெரும் கடன் சுமையில் தள்ளிவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கடன் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளதால் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன என்று செய்திகள் வந்துள்ளன. எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கும் அவல நிலைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வந்துவிட்டது. திமுக அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

இப்படிபட்ட சூழலில், திமுக அரசு விழித்துக்கொண்டு, போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *