போர்ச் சூழல்… முதலீட்டைப் பத்திரப்படுத்த இவற்றைச் செய்யுங்கள்!

Spread the love

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் நடத்தும் போர் தீவிரம் அடைந்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் போர்ச் சூழல் சூடுபிடித்துவருகிறது. அதன் விளைவாக பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி என எல்லாவற்றிலும் அதிரடியான ஏற்ற, இறக்கத்தைப் பார்க்க முடிகிறது. இவற்றின் போக்கைக் கணிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் வெள்ளி விலை குறித்து பெரும் எதிர்பார்ப்பு சந்தையில் இருந்தது. ‘வெள்ளி ஒரு கிலோ ரூ.5 லட்சம் வரை போகும்’ எனச் சொல்லப்பட்டது. தற்போதோ, வெள்ளி விலை அதன் சமீபத்திய உச்சத்தில் இருந்து சுமார் 44% சரிந்து, ரூ.2.85 லட்சத்தில் வர்த்தகமாகிறது. இன்னும் இறங்கி ரூ.1.5 லட்சத்துக்குப் போகும் எனச் சொல்லப்படுகிறது.

போர் போன்ற நெருக்கடியான காலங்களில் தங்கம் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும். ஆனால், இந்தப் போர்ச் சூழலிலும் டாலர் வலுப்பெறுவதால் தங்கத்தின் விலையேற்றம் தடைபட்டுள்ளது. இப்படி, தங்கம், வெள்ளி சார்ந்த கணிப்புகள் எல்லாம் பொய்யாகி இருக்கின்றன.

பங்குச் சந்தையில், போர் காரணமாக சில தினங்களில் காணப்பட்ட தொடர் சரிவு பல லட்சம் கோடி இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இடையிடையே சிறிதளவு ஏற்றத்தையும் சந்தை பதிவு செய்கிறது. மொத்தத்தில், பங்கு முதல் தங்கம் வரை எந்த வகையான முதலீடுகளிலும் இதுதான் போக்கு என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் கூறியுள்ள வார்த்தைகள், இதுபோன்ற நிச்சயமற்ற சூழல்களில் மிக முக்கியமானவை: முதலீட்டுச் சந்தையில் பயம், பேராசை இரண்டையும் தவிர்த்து, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத நிதானமான அணுகுமுறையே வெற்றி தரும். நாம் மற்றவர்களைவிட புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை; மற்றவர்களைவிட ஒழுக்கமுடன் இருந்தாலே போதும்.

முதலீட்டில் எப்போதும் நீண்டகாலப் பார்வை அவசியம். கமாடிட்டி, டெரிவேட்டிவ்ஸ் போன்ற புரிந்துகொள்ள முடியாத சொத்துகளில் அதிகமான பணத்தை முதலீடு செய்வது கூடாது. முதலீட்டைப் பல்வகைப்படுத்தி, அடிப்படைகளில் வலுவாக உள்ள நிறுவனங்கள், பங்குகள், செலவு குறைந்த இண்டெக்ஸ் ஃபண்டுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பதற்றம், அவசரத்தில் விற்கக்கூடாது. சந்தையில் பயம் வரும்போது முதலீடு செய்யும் வாய்ப்புகளைத் தேட வேண்டும். ஆனால், கடன் வாங்கி முதலீடு கூடவே கூடாது.

போர், எரிசக்தி நெருக்கடி, வலுவான டாலர், ரூபாய் சரிவு, வர்த்தக பாதிப்பு என இவை எல்லாமே மாறலாம். எனவே, கணிப்புகளை நம்பாமல் ஒருவர் தனது இலக்குகள், ரிஸ்க்கை தாங்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப முதலீட்டு உத்தியை வகுத்துக்கொள்ள வேண்டும். தொழில்முறை நிதி ஆலோசகரை அணுகுவது மிகவும் நல்லது.

முதலீட்டை பாதுகாத்துக்கொள்வோம்!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *