போர்நிலத்தின் சாட்சியமான யாக்கைக்களரி நவீன நாடகம்! |The breasts of mothers, shriveled by hunger, and the tears and kisses, stir the memories in our hearts.

Spread the love

உலகில் போர்ச்சூழல் எங்கு நிலவினாலும் போர் பற்றிய நினைவும், பாதிப்பும் பூமியில் வாழ்கிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தப்போர்ச்சூழலின் நினைவுச்சுமையை நம் உணர்வுகளில் கடத்தி கணக்க வைக்கிறது “யாக்கைக்களரி’ என்ற இந்த நவீன நாடகம்.

மணல்மகுடி நாடக குழுவும், புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையும் இணைந்து எக்மோர் அரசு அருங்காட்சியக அரங்கில் நேற்று ‘யாக்கைக்களரி’ நாடகத்தை நிகழ்த்தி இருந்தார்கள். இந்த நாடகத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போர் நிலத்தின் சாட்சியம் :

போரினால் மூடுண்ட கிணறுகள், குண்டடிக்குத் தப்பிய மரங்கள், மரித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிழல்கள் இவைகளின் நடுவே கதைபாடும் பெண்ணைத் தேடி அலையும் பயணம் தான் ‘யாக்கைக்களரி’. குறியீட்டு காட்சி படிமங்களாக உடல் மொழி, ஒளி அமைப்பு, ஒலியிசைக் கருவிகள் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பாக இருந்தது. மரக்கிளைகளில் வந்து அமரும் பறவை, அதன் அலகால் பிடித்திருக்கும் திரை, இறக்கைகளின் படபடப்பில் உருவாகும் அதிகாரத்தின் போலிப் பிம்பங்கள், இயற்கையே இங்கு சாட்சியாகவும் கதாப்பாத்திரங்களாக அமைந்திருந்தார்கள்.

பசியால் உறிஞ்சப்பட்ட தாய்மார்களின் மார்புகளும், கண்ணீராலும் முத்தங்களாலும் பிசுபிசுத்த குழந்தைகளின் முகங்களும், அந்தச் சின்னஞ்சிறு பறவைகளும் ஓலங்களும் நம் காதுகளில் ஒலித்து நம் மனங்களின் நினைவை தட்டி எழுப்புகிறது. போர் நிலத்தின் சாட்சியமாக ஒவ்வொரு நொடியும் நம்மை திடுக்கிட வைக்கிறது.

யுத்தத்தில் மரித்தவர்கள் இயற்கையின் குரல்களாக மாறி அமைதியை நோக்கி நகரும் பயணத்தையே இந்த நாடகம் போதிக்கிறது. போரினால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் இழப்பினைச் சொல்லி, மீட்சியின் நம்பிக்கையைச் சுமப்பவளாக பெண்ணை முன்வைக்கிறது. அடையாளம் அழிக்கப்பட்ட சிறுமிக்கு கலை வழியாக அன்பின் முகம் ஏற்றப்படுவது உருவேற்றல். ஆப்பிரிக்க டிஜிம்பேவும் தமிழ்நாட்டின் ஜிம்ளாவும் சந்திக்கும் தருணம், யுத்த வெறுப்பை கரைக்கும் பண்பாட்டுக்கலையின் உரையாடலாக உருமாறுகிறது. ஒவ்வொரு ஒலியும் காட்சிகளின் பின்னணியாக இல்லாமல் காட்சிப்பொருளாக இருந்தது. நாடகத்திற்கு ஏற்ப நேர்த்தியான உடைகளை பொருத்தி இருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் விக்னேஷ் குமுளை. ஒலி, ஒளி அமைப்பும் நாடகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முருகபூபதி

முருகபூபதி

மணல்மகுடி நவீன நாடக இயக்குனர் ச. முருகபூபதி இந்த நாடகத்தை இயக்கியிருக்கிறார். இந்த நாடகம் குறித்து அவரிடம் பேசும் போது, ‘யாக்கைக்களரி’ ஒரு கதை சொல்லும் நாடகம் அல்ல. அது ஒரு அனுபவ நிலம். போர் அழிக்க முயன்ற உடல்களை, கலை மீண்டும் மனிதர்களாக்கும் தருணம். நம்பிக்கை என்பது ஒரு விநோத உயிரினம் என்று சொன்ன நாடகம், அந்த உயிரினத்தை பார்வையாளர்களின் மனங்களில் விதைத்துவிட்டு அமைதியாக வெளியேறுகிறது” என்று கூறினார்.

– சு. சி. வீரகுந்தவை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *