தில்லியில் இருந்து அரசு முறை பயணமாக போலந்து நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.
போலந்தில் இருநாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் ஆக. 23ஆம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார்.
கடந்த ஜூலை மாதம் இரு நாள் பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்த நிலையில், தற்போது உக்ரைனுக்கு செல்வது சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் உடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் தலைநகர் கீவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது.
போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு தேவையான உதவிகளை இந்தியா செய்துதரும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ரஷிய அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், தற்போது அவர் உக்ரைன் அதிபரிடமும் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.