திருச்சியை சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை(ஜூலை 11) புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா்.
இவா் மீது 4 கொலை மற்றும் வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
ரெளடி துரை உயிரிழந்த தகவலறிந்த அவரின் தாய் மல்லிகா, சகோதரி சசிகலா ஆகியோா் வியாழக்கிழமை இரவு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனா். இந்த நிலையில், ரௌடி துரைசாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உடற்கூராய்வுக்கு பின் அவரது உடல் இன்று(ஜூலை 12) அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அவரது சொந்த ஊரான திருச்சியில் தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அசம்பாவிதங்களை தடுக்கும் மருத்துவமனையில் உரிய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடலை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் உரிய போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு பயணித்துள்ளது.