போலீஸ் கையிலெடுத்த புதிய சட்டம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் சொத்துகளை முடக்க நடவடிக்கை | Police take action to freeze assets of arrested persons in Armstrong murder case

1336782.jpg
Spread the love

சென்னை: புதிய குற்றவியல் சட்டத்தின்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் சென்னை போலீஸார் இறங்கி உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இவ்விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சகோதரர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது ஒருபுறமிருக்க, கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் பொன்னை பாலு உட்பட 10 பேர் முதல் கட்டமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்சியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பழைய வண்ணாரப்பேட்டை ஹரிகரன் (27), திருவல்லிக்கேணி மலர்கொடி (49), திருநின்றவூர் சதீஷ்குமார் (31), திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஹரிஹரன் (37), புளியந்தோப்பு அஞ்சலை (51), சென்னை காமராஜர் சாலை சிவா (35), பெரம்பூர் பிரதீப் (28), கோடம்பாக்கம் முகிலன் (32), அதே பகுதி விஜயகுமார் என்ற விஜய் (21), விக்னேஷ் என்ற அப்பு (27), ராஜேஷ் (40), செந்தில் குமார் (27), வியாசர்பாடி அஸ்வத்தாமன் (31), ரவுடி பொன்னை பாலு மனைவி ராணிப்பேட்டை பொற்கொடி (40), கே.கே.நகர் கோபி (23) ஆகிய மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேலூர் சிறையில் ஆயுள் சிறை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், கடந்த ஜூலை 14-ல் போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவேங்கடம் தவிர மீதம் உள்ள 25 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் காவல் ஆணையர் அருண் நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கில் பிரபல ரவுடியான சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணன் உட்பட 3 பேரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்திய போலீஸார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதற்கிடையே புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ‘பி.என்.எஸ்.107’ சட்டப் பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறைக்கு மட்டுமே இருந்து வந்த இந்த அதிகாரம் புதிய சட்டப் பிரிவின் கீழ் போலீஸாருக்கும் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த சட்டத்தை பயன்படுத்தி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையள்ளவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் செம்பியம் போலீஸார் இறங்கி உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *