புதுச்சேரி: “போலீஸார் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெறும்” என்று வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி அறிவித்துள்ளார்.
பாமக, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி பேசியது: “புதுச்சேரியில் முதல்வர் வீட்டு வாசலில் கொலை நடக்கிறது. மாதம்தோறும் கொலை நடக்கும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதற்கு சளைக்காமல் தமிழ்நாடு வந்துவிட்டது. தமிழகத்தில் கொலை சாதாரணமாகிவிட்டது.
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்திரைத் திருவிழா வன்னியர் சங்கத்தின் இளைஞர் மாநாடு மாமல்லபுரத்தில் நடத்தப்படும். போலீஸார் தடுத்தால் தடையை மீறி மாநாடு நடத்தப்படும். மாநாட்டுக்கு இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும். சினிமாவில் நடித்து கொண்டிருந்த உதயநிதி, நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார். அடுத்து எங்கள் ஆட்சிதான் என ஆட்டம் போடுகிறார். இதற்கு போட்டியாக அடுத்து ஒரு சினிமாக்காரர் வந்து ஒரு கூட்டம் போட்டு 2026-ல் ஆட்சி என்கிறார் விஜய். அடுத்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார். அவருக்கு துணையாக இருக்கும் உதயநிதிக்கு நடிகைகளுடன் டான்ஸ் ஆட மட்டும் தான் தெரியும்” என்று அருள்மொழி கூறியுள்ளார்.