சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. இந்த மரணத்தின் பின்னணியையும் விசாரிக்கத் தொடங்கியது.

கிருஷ்ணா படேல் கொத்தனார் தொழில் செய்துவந்தார். ரமா பாய் இல்லத்தரசி. இவர்களுக்கு ஆதித்யா படேல் (21) என்ற ஒரே மகன்தான் உலகம். 2024-ல் நடந்த சாலை விபத்தில் ஆதித்யா படேல் பரிதாபமாக உயிரிழந்தார். அன்றிலிருந்து தம்பதி இருவரும் அமைதியாகிவிட்டதாக தெரிகிறது. “ஆதித்யா இருந்தபோது வீடு சிரிப்பால் நிரம்பியிருந்தது. அவன் போன பிறகு அவர்கள் சிரிக்கவே இல்லை” என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விசாரணைக்கு மத்தியில் கிருஷ்ணா படேலின் வீட்டிலிருந்து, கிராமத்தையே உரையவைக்கும் 4 பக்கக் கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில், “ஆதித்யா எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம். எங்கள் உலகம்… எங்களை மதிக்கும் மகன் என்பதை விட நல்ல நண்பன். அவன் எங்கள் கடவுளின் ஆசீர்வாதம். வீட்டை சிரிப்பால் நிரப்பினான். எங்களை பெற்றோரைப் போல பராமரித்தான். விபத்து நடந்த அன்று கோயில் விஷயமாக பூசாரியுடன் உதவிக்குச் சென்றுவர அறிவுறுத்தினேன். அவன் ஒரு கிராம பூசாரியுடன் கோயில் வேலைக்குச் செல்ல தயங்கினான். ஆனால் நான் ‘இது கடவுளின் வேலை’ என்று வற்புறுத்தி அனுப்பினேன். அதுதான் என் வாழ்க்கையின் நான் செய்த மிகப்பெரிய தவறு.

நாங்கள் உயிருடன் இருக்கும் சடலம்போல வாழ்ந்து வருகிறோம். எனவே, நாங்கள் இருவரும் உணர்வுபூர்வமாகவும், விருப்பத்துடனும் சிவபெருமானுக்கு எங்களை அர்ப்பணிக்கிறோம். இதற்கு யாரும் காரணம் அல்ல. மகிழ்ச்சியான இதயத்துடன் எங்களை வழியனுப்புங்கள். எங்களுக்காக துக்கப்படாதீர்கள். நாங்கள் முழு அமைதியுடன், மகிழ்ச்சியான மனநிலையுடன் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார், கிருஷ்ணா படேல்.
ஒரு வீடியோ செய்தியும் கிடைத்தது. அதில், ஆதித்யாவின் விபத்துக்குப் பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகையை தங்கள் மூத்த சகோதரர்களான குல்பரா படேல் மற்றும் ஜல்பரா படேலுக்கு மாற்றித் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மகனை இழந்த துயரத்தில் பெற்றோரும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.