விபத்தில் உயிரிழந்த மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, அவதூறு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்கின்றனர் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாரத் செந்தில், இந்து மக்கள் கட்சியின் மாநில தொழிற்சங்கப் பிரிவுத் தலைவராக உள்ளார். இவர் முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக 50 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவருக்கு கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் கிடைக்காததால், உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் பெற முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரத் செந்திலின் மகனான கல்லூரி மாணவர் சபரீசன்(19) கடந்த 7-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் செந்திலுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. பின்னர், 6 மணி நேரம் போலீஸ் காவலில் சிறையில் இருந்து வெளியே வந்து, தனது மகனின் இறுதிச் சடங்கில் பாரத் செந்தில் பங்கேற்றார். பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மகனின் 15-ம் நாள் காரியத்தில் பங்கேற்பதற்காக ஜாமீன் பெற முயற்சிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறும்போது, ‘‘கைதான செந்திலை, அவரது மகனின் இறுதிச் சடங்கில்கூட பங்கேற்க விடாமல் தடுக்கின்றனர். இருமுறை ஜாமீன் கேட்டும், வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறவும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும், திமுக அரசின் மனிதாபிமானமற்ற செயலை கண்டித்தும் வரும் 16-ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. செய்யாத குற்றத்துக்காக மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்ய பாரத் செந்தில் தயாராக இல்லை. முகநூலில் ஒரு படத்தை பகிர்ந்ததற்கு இப்படி பழிதீர்ப்பதா?’’ என்று தெரிவித்துள்ளார்.