`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?’- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

Spread the love

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத்திருந்தனர். அடிக்கடி கோவிந்தா மீது அவரது மனைவி சுனிதா அஹுஜா புகார்களை கூறி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் தன்னுடைய கணவர் தங்கள் மகன் யஷ்வர்தன் சினிமாவில் நுழைய உதவவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். அவர் இது தொடர்பாக அளித்திருந்த பேட்டியில், “‘எங்கள் மகன் யஷ்வர்தன் தொழில் ரீதியாக முன்னுக்கு வர அவர் தந்தை எந்த விதத்திலும் உதவவில்லை. என்னுடைய மகன் சுயமாக முன்னேறுகிறான். அவனது தந்தையிடம் இதற்காக உதவி கேட்டதில்லை. யஷ்வர்தன் பட வாய்ப்புக்காக 90க்கும் மேற்பட்ட இடங்களில் நடித்துக் காட்டி இருக்கிறான்.

மகனுடன் கோவிந்தா

மகனுடன் கோவிந்தா

யாரிடமும் பரிந்துரைக்கும்படி கோவிந்தாவிடம் யஷ்வர்தன் கேட்டது கிடையாது. கோவிந்தாவும் யஷ்வர்தனுக்கு உதவியது கிடையாது. நான் கோவிந்தாவை பார்த்து நீங்கள் குழந்தைகளுக்கு அப்பாவா இல்லையா? நீங்கள் நமது குழந்தைகளுக்கு உதவவில்லையெனில் யார் உதவுவார்கள் என்று கேட்டிருக்கிறேன்.

ஷாருக் கான், அமிதாப் பச்சன், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் தங்களது மகன்களுக்கு எப்படி உதவி இருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று கேட்டு இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு நடிகர் கோவிந்தா அளித்துள்ள பதிலில், ”எனது அரசியல் வாழ்க்கையால் குடும்பம், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக எனது அரசியல் வாழ்க்கையை கைவிட்டேன். எனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலாவிடம் பேசினேன். அவரிடம் எனது மகனுக்கு வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டேன். சினிமா தயாரிப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நானும் கற்றுக்கொடுத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மராத்தி நடிகை ஒருவருடன் கோவிந்தாவிற்கு தொடர்பு இருப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டி இருந்தார். இக்குற்றச்சாட்டை மறுத்து பதிலளித்துள்ள நடிகர் கோவிந்தா, ”என் மீது குற்றம் சாட்டுவது எனது பால்ய கால காதல். காதல் விஷயத்தில், அது சரியாக வேலை செய்யவில்லை. என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்திருக்கிறேன். அவர்களிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொண்டது கிடையாது. ஆனால் இவ்விவகாரத்தில் எனது மனைவியின் நேர்காணலை நான் பார்க்கவில்லை. ஆனால் என்னுடன் நடிக்க எந்த நடிகையும் பயப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *