அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இணையருக்கான திருமண கொண்டாட்டத்தின் ஆரம்பமாக மகாராஷ்டிரம் பால்கர் பகுதியை சேர்ந்த ஏழை மணமக்கள் 50 பேருக்கு அம்பானி குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைத்தனர்.
ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடந்த இந்த நிகழ்வில் மணமக்களின் உறவினர்கள், சமூக பணியாளர்கள் உள்பட 800 பேர் பங்கேற்றனர்.

அம்பானி தனது குடும்பத்தினருடன் திருமணத்துக்கு தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமகன் மற்றும் மணமகளுக்கு தனிதனியாக பரிசுகள் அளிக்கப்பட்டன. தாலி, மண மோதிரம், மூக்குத்தி உள்பட தங்க ஆபரணங்கள், வெள்ளியில் மெட்டி மற்றும் கொலுசு மணமகளுக்கும் ரூ.1.01 லட்சம் மதிப்புள்ள காசோலை மணமகனுக்கும் தரப்பட்டது.

கூடுதலாக திருமண சீர்வரிசையாக வீட்டு உபயோக பொருள்கள், ஓர் ஆண்டுக்கு தேவையாள மளிகை பொருள்கள் ஆகியவை கொடுக்கப்பட்டன. திருமணத்திற்கு பிறகு பிரம்மாண்டமான விருந்தும் நடைபெற்றது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி, புதிதாக திருமணம் ஆன இணையர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களை வாழ்த்துகிறேன். ஆனந்த் மற்றும் ராதிகா திருமண நிகழ்வுகள் இன்றைய திருமண நிகழ்வோடு சுப லக்னத்தில் தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி இணையர்களின் மகன் ஆகாஷ் அம்பானி அவரது மனைவி சோல்கா மெத்தா மற்றும் மகள் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிராமல் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12 மும்பையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.