மகப்பேறு விடுப்புக்குப் பின் பெண் காவலர்களுக்கு சொந்த மாவட்டத்துக்கு 3 ஆண்டு பணி மாறுதல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | It is the duty of the state to protect the policemen who protect the people – CM Stalin

1299688.jpg
Spread the love

சென்னை: மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு இந்திய குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் தமிழக முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

தமிழக காவல் துறை சார்பில், நடைபெற்ற இவ்விழாவில் 475 பேர் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், கூடுதல் டிஜிபிக்கள் அமல்ராஜ், வெங்கட்ராமன், சங்கர், ஐஜி-க்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, சுதாகர், பாலகிருஷ்ணன், பவானீஸ்வரி, தேன்மொழி உள்பட 68 பேருக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். மீதமுள்ளவர்களுக்கு காவல் துறை உயரதிகாரிகள் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “என் துறையைச் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்றிருப்பதை பார்க்கும்போது நான் பதக்கம் வாங்கியதுபோல எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும், திறமையும் தலைவணங்கத்தக்க அம்சமாகும். தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ்கிறது என்றால், அந்தப் பெருமையில் தமிழக காவல்துறைக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அமைதியான மாநிலத்தில்தான் வளமும் வளர்ச்சியும் இருக்கும்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய பெருமையை அரசுக்கு உருவாக்கித் தரும் காவலர்கள் எல்லோருமே பதக்கங்களுக்கு தகுதி படைத்தவர்கள்தான். சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படும் காவல் அதிகாரிகளையும், போலீஸாரையும் நான் மனதார பாராட்டுகிறேன். கடந்த மூன்றாண்டு காலத்தில் காவல் துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், காவல் துறையை நவீனமயமாக்கவும், காவலர் நலனைப் பாதுகாக்கவும் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்சனைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண்காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

குற்றங்கள் நடக்காத மாநிலமாக, போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக, பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக, நம்முடைய மாநிலம் உருவாக வேண்டும். குற்றங்கள் எங்கேயும் யாராலும் நடக்கக் கூடாது. மீறி நடந்தால், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டாக வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விரைவாக தண்டனையை பெற்றுத் தந்தாக வேண்டும். இந்த உறுதிமொழியை நான் மட்டும் எடுத்தால் போதாது. காவல்துறையின் உயரதிகாரிகள் மட்டும் எடுத்தால் போதாது. ஒவ்வொரு காவலரும் எடுத்தாக வேண்டும்.

என்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த வகைப்பட்ட குற்றமும் நடக்கவில்லை. நடக்க விடமாட்டேன் என்று ஒரு காவலர் முடிவெடுத்துவிட்டால் குற்றங்கள் பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும். மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழகம், குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான், நமக்கெல்லாம் பெருமை. இதில் பூஜ்ஜியம் வாங்க 100 சதவீதம் அர்ப்பணிப்புடன், அனைத்துக் காவலர்களும் பணியாற்ற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *