மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை தடுக்க ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கலை தாமதிப்பதா? – ராமதாஸ் கண்டனம் | Ramdoss insists government to issue ration smart cards without further delay

1299650.jpg
Spread the love

சென்னை: மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் விநியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும் தவறாகும். ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பெறுவது தமிழ்நாட்டு மக்களின் உரிமை ஆகும். எந்தக் காரணத்தைக் கூறியும் அதை தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்கான ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆதாருக்கு அடுத்தபடியாக மிக முக்கிய ஆவணமான குடும்ப அட்டைகளை வழங்குவதில் தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் காலதாமதம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பன்முக பயன்பாடு கொண்டவை ஆகும். நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் அவை பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும். இவற்றுக்கெல்லாம் மேலாக மாதம் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் குடும்ப அட்டை கட்டாயம். ஆனால், புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் லட்சக்கணக்கான மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும், உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவிப்பை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்குவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆதாரை அடிப்படையாக வைத்து தான் புதிய குடும்ப அட்டை கோருவோரின் விவரங்களை மிகவும் எளிதாக சரிபார்த்து வழங்கி விட முடியும். 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு குடும்ப அட்டை எண்ணும் வழங்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்வது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் விநியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும் தவறாகும்.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பெறுவது தமிழ்நாட்டு மக்களின் உரிமை ஆகும். எந்தக் காரணத்தைக் கூறியும் அதை தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *