மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் என வதந்தி: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் | Kalaignar Magalir Urimai Thittam: Fake message drives women to throng Villupuram collectorate

1296708.jpg
Spread the love

விழுப்புரம்: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை உண்மை என நம்பி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர். இதையடுத்து, இந்தத் தகவல் வெறும் வதந்தி என்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் விடுபட்டுப்போனவர்கள் இணைவதற்கான சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இதுவரை இந்தத் திட்டத்துக்காக 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (ஆக.17) முதல் மூன்று நாட்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இத்தகவலை உண்மை என நம்பிய விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் குவிந்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்துப் பார்த்ததில் அப்படி எவ்வித முகாமும் நடைபெறவில்லை என்று அறிந்த அந்தப் பெண்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி முற்றிலும் வதந்தியே என விழுப்புரம் ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *