இன்று காலை மகளிர் உரிமை தொகை முன் பணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதியை அனைத்துக் குடும்பத் தலைவிகளும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. நாம் இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த முனைந்து வரும் வேளையில், அதற்கு எதிராகத் டெல்லியில் உள்ள ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிபணிந்து நடக்கும் மற்றொரு கூட்டமும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தச் சூழ்ச்சி செய்வதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் சிலர் முயற்சிப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்தத் திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்தால் நீங்கள் எத்தகைய சிரமங்களுக்கு உள்ளாவீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் நன்கு அறிவேன். கடுமையான வெயிலில் பணிக்குச் செல்ல இயலாத கோடை காலத்தில் இப்பணம் நிறுத்தப்பட்டால் உங்களுக்கு ஏற்படும் இடரை என்னால் உணர முடிகிறது.
உங்கள் மாதாந்திரச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பீர்கள்? நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கவோ அல்லது குழந்தைகளின் தேர்வுக் காலங்களில் அவர்களுக்கான கல்விச் செலவுகளைச் செய்யவோ இயலுமா? இக்கஷ்டங்களை எல்லாம் கருத்தில் கொண்டே ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன். அதன்படி, இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கான (மார்ச், ஏப்ரல்) உரிமைத் தொகைத் தவணைகளைச் சேர்த்து 3,000 ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளுக்காக 2,000 ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, மொத்தம் 5,000 ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்தத் தருணத்தில் மற்றுமொரு வேண்டுகோள்; இந்த 5,000 ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் கவனமாகச் செலவிடுங்கள், இயன்றவரை சேமிக்கவும் முயலுங்கள். அன்புச் சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமையவிருப்பதும் திராவிட மாடல் ஆட்சிதான். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில் உங்களுடைய உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- திராவிட மாடல் 2.0-இல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள்-ஆக நடைபோட என்றும் துணை நிற்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மா.கம்யூ மாநில செயலாளர் பெ.சண்முகம் : தமிழகமெங்கும் ரூபாய் 5000 என்பதே பேச்சாக இருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை பெறக்கூடிய அனைத்து குடும்பங்களிலும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியை காண்கிறேன். காலையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சியை மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்து விட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். என தெரிவித்துள்ளார்.
இதே போன்று காங்கிரஸ் எம்பிக்கள் கார்த்திக் சிதம்பரம், ஜோதி மணி உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர்.
பாஜக மூத்த தலைவர், தமிழக முதலமைச்சர் @mkstalin எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்… ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை… இது தர்மத்திற்கு எதிரானது.. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்கு ஆக மட்டுமே செய்கிறார்கள். என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கடுமையாக மகளிர் உரிமை தொகை முன் பணம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளனர்.
