மகளிர் மாநாடு: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன"- உதயநிதி

Spread the love

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் உதயநிதி பேசியதாவது, ”மற்ற இயக்கங்கள், வருடத்திற்கு ஒரு முறை, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாநாடு நடத்துவார்கள், ஆனால் திமுக மட்டும்தான் மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்துகிறது. இதன் மூலம் இயக்கத்தின் கொள்கைகள், அரசின் சாதனைகள், தலைவர் சாதனைகள் தொடர்ந்து பேசப்படுகின்றன.

மகளிர் அணி 
மாநாட்டில் உதயநிதி
மகளிர் அணி
மாநாட்டில் உதயநிதி

இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தவர் கலைஞர். அவர் வழியில், பெண்களுக்குப் பார்த்துப் பார்த்து நமது தலைவர் ஆட்சி செய்கிறார். விடியல் பயணத்திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனப் பல திட்டங்களைச் சொல்லலாம். மகளிர் முன்னேற்றத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக வழிகாட்டியாக முதல்வர் ஆட்சி செய்கிறார்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தவர், திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனப் பேசியுள்ளார். பிரதமர், மைக் என நினைத்து கண்ணாடியைப் பார்த்துப் பேசியிருக்கிறார்.

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை நாடே பார்த்தது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆட்சி சரியில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டது. ஓராண்டாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக மகளிர் அணி 
மாநாடு
திமுக மகளிர் அணி
மாநாடு

2002 ஆம் ஆண்டு இதே பிரதமர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கலவரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது பெண்கள். ஐந்து மாத கர்ப்பிணி பாலியல் கொடுமை செய்யப்பட்டார்.

குடும்பமே கொலை செய்யப்பட்ட கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு. குற்றவாளிகளுக்கு ஆதரவு கரம் கொடுத்த கட்சிதான் பாஜக. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குப் போகும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம். இந்த மாநிலங்களை ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக.

பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பெண்களிடம் ஓட்டு கேட்பதற்கு வெட்கம் இல்லையா மோடி என்று மக்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் தமிழ்நாட்டிற்குள் வந்தால் மகளிருக்கும் பாதுகாப்பு கிடையாது நம்முடைய மாநிலத்திற்கும் பாதுகாப்பு இருக்காது.

டெல்டா திமுக மகளிர் அணி 
மாநாடு
டெல்டா திமுக மகளிர் அணி
மாநாடு

பெண்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முயல்கிறது. இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தார்கள். இன்று அந்த நிதிச் சுமையை மாநில அரசின் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள்.

இதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது முதல்வர். நம்பர் ஒன் அடிமையான எடப்பாடி பழனிசாமி இதற்கும் முட்டுக்கொடுத்து வருகிறார். முரட்டு பக்தர் கேள்விப்பட்டிருப்போம், முரட்டுத் தொண்டர் பார்த்திருப்போம். ஆனால் அடிமையாக நமது கண் முன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமின்றி புதுப்புது அடிமைகளுடன் நுழைகின்றனர். எத்தனை பேர் வேண்டுமானாலும் கிளம்பி வரட்டும் ஆனால் திமுகவை, நம்முடைய தமிழ்நாட்டை அவர்களால் தொட்டுக் கூட பார்க்க முடியாது.

அதற்கு இங்கு இருக்கக்கூடிய நமது மகளிர் படை நிச்சயம் காவல் அரணாக இருப்பார்கள். நமது அரசு அமைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் மகளிர்தான். அரசைக் கொண்டாடுவதும் இங்கு வந்துள்ள மகளிர்தான். அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும்.

200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழாவது முறை ஆட்சி அமைக்கவும், தலைவர் இரண்டாவது முறை மீண்டும் முதலமைச்சராக அமரவும் இங்கு வந்திருக்கும் மகளிர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *