சென்னை மணலி, பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(40). நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி(35). இவர்களது மகள் காவியா(12). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஜெகநாதன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களது மகள் காவியா அருகில் இருந்த சோபாவில் பிணமாகவும் கிடந்தார். காவியாவின் கழுத்தில் கயிறு இருந்தது. அவர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.ஜெகநாதன் கடன் பிரச்சினையில் சிக்கி இருந்தார். இதனால் ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் மகள் காவியாவை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு பின்னர் அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.