குன்னூர்: “மகள் மற்றும் பேத்தியின் உடல்கள் குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் அங்கேயே தகனம் செய்துவிட்டோம்” என வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கரன்சி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் கவுசல்யா(26) குடும்பத்துடன் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள், மருமகன் மற்றும் பேத்தி உயிரிழந்ததை அறிந்து வயநாடு சென்று விட்டு, உடல்களை குன்னூர் கரன்சி பகுதிக்கு கொண்டு வர முடியாமல், அங்கேயே அவர்களது உடல்களை தகனம் செய்து விட்டு, இன்று கரன்சி பகுதிக்கு திரும்பியுள்ளார் கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன்.
மூவரின் உடல்களை கொண்டு வர முடியாத நிலையில், அங்கேயே தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக கண்ணீருடன் கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறும்போது, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் கவுசல்யாவுக்கும், சூரல்மலை பகுதியைச் சேர்ந்த பிஜிஸ் குட்டன் (36) என்பவருக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
பிஜிஸ், மனைவி கவுசல்யா மற்றும் குழந்தையுடன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குடும்பத்துடன் மூவரும் உயிரிழந்து விட்டனர். மேலும், உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் அங்கேயே அவர்களது உடலை தகனம் செய்துவிட்டோம். பிஜிஸ் குட்டனின் பெற்றோர் உட்பட மூவரின் உடல் தேடப்பட்டு வருகிறது. அரசு அவர்களது உடலைக் கண்டுபிடிக்க உதவி புரிய வேண்டும்” என்றார்.