மகா(ன்)பிரசாதம்: அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்? – Kumudam

Spread the love

அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்?

-ஜெயாப்ரியன்

 
அம்பிகை லோகமாதா என்றால், எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

ஏன் பராசக்தி, துர்க்கை, காளி,மாரி என்று ஆளுக்கு ஒரு வடிவமாகச் சொல்லியிருக்கிறார்கள்? என்று சிலபேர் கேட்கிறார்கள்.

எல்லா உயிர்களுக்குமே தாயார் என்று இருந்தே ஆகவேண்டும். அதேசமயம், மத்த எந்த ஜீவராசிக்கும் இல்லாத ஒரு விஷயம், மனுஷக் குழந்தைகளுக்கு உண்டு.

அது, எப்போதும் தாயார்க்காரி கூடவே இருக்க வேண்டும். அதாவது, குழந்தைக்குத் தேவையான எல்லாவற்றையும் அம்மா செய்துவிட்டாலும் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய சுபாவம், இந்த மனுஷக் குழந்தைக்கு இயல்பாகவே இருக்கிறது.

இந்த குணம் சில குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு கூட மாறுவதில்லை. கல்யாணமாகி அகத்துக்காரி வந்த பிறகும்கூட அம்மாவை எதிர்பார்க்கிறவர்களை ‘அம்மா கோண்டு!’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா?

மனுஷத் தாயிடமே இத்தனை எதிர்பார்ப்பு என்றால், இந்த லோகத்துக்கே அம்மாவாக, ஜகத் ஜனனியாக இருக்கக் கூடிய தாயாரிடத்திலே எத்தனை எதிர்பார்ப்பு இருக்கும்?

ஆனால் ஒரு விஷயம் கவனித்தீர்கள் என்றால், எல்லோருக்குமே ஒரே தாய் என்றாலும், அந்தத் தாயை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? என்பதுதான் மாறுபடுகிறது.

வீரம் வேண்டும் என்பவர் துர்க்கையாக, காளியாகப் பார்க்கிறார். தனம் தேவையானால் அவளே மகாலக்ஷ்மியாகிவிடுவாள். படிப்பு, ஞானம் எல்லாம் வேண்டும்போது அவளே சரஸ்வதியாக வேஷம் தரித்துக்கொண்டுவிடுவாள். அதாவது யார், எதைக் கேட்கிறார்களோ அதைத் தரும்போது அந்த வேஷத்தை ஜகன்மாதா எடுத்துக்கொள்கிறாள்.

இதெல்லாம் பார்க்கிறவர்கள் பார்வையில்தான் மாறுபாடே தவிர, மற்றபடி ஜகன்மாதா, பராசக்தி என்பதெல்லாம் ஒரே தெய்வம்தான். ஒரே அம்பிகைதான்.

எல்லா இனிப்பு பட்சணமும் ஒரே ருசிதான். ரூபம்தான் வேறு.

இதைப் புரிந்துகொள்வதற்குதான் ஞானம் தேவைப்படுகிறது. அதற்கு முதல் அடியாக இருப்பது பக்தி. அதுதான் பூரணமாகும்போது ஞானம் ஆகிறது.

(பிரசாதம் மணக்கும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *