மகா(ன்)பிரசாதம்: கோழியா? சேவலா? – Kumudam

Spread the love

மகா(ன்)பிரசாதம்: கோழியா? சேவலா? 

-ஜெயாப்ரியன்

கோழி கூவுகிறது என்று சொல்கிறோமே, அதிகாலையில் கூவுவது சேவல்தானே என்றெல்லாம் ஏ.ஐ. காலத்திலும் ஏடாகூடங்களையே பேசிக்கொண்டிருக்கிறோம் நாம். ஆனால், இதற்கு அன்றே விடை சொல்லியிருக்கிறார் காஞ்சி மகான்.

கந்தசஷ்டி வரும் இந்த சமயத்தில் மகானின் இந்த வார்த்தைகளே பிரசாதமாக மணப்பதை அனுபவியுங்கள்.

 “கொக்கரக்கோ என்று கோழி கூவுவதாகச் சொல்கிறோம். இங்கே கோழியா? சேவலா? என்று பலரும் விவாதிக்கிறார்கள். ஆனால், கோழி என்ற சொல், பொதுவான பெயர். அதற்கு முன் பெட்டை என்றோ, பேடு என்றோ சேர்த்தால், அது பெண்பாற்பெயராகும்.

முருகப் பெருமானுடைய கொடியில் இருப்பது சேவல்தான். ஆனால், பெரியபெரிய மகான்கள் எல்லாம் அவரை கோழிக்கொடியோன் என்றுதான் சொல்கிறார்கள். கந்தபுராணத்தில் கூட கோழிக்கொடியோன் என்று இருக்கிறது. சேவற்கொடியோன் என்றும் சொல்வது உண்டு. என்றாலும் கோழிக்கொடியோன் என்பதும் சரியாகத்தானே இருக்கிறது.”

தமிழ்க்கடவுளுக்கே உரிய தனிவிசேஷமான கந்தசஷ்டி வரும் இந்தசமயத்திலே இன்னொரு விஷயமும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. அது, தினமும் அதிகாலையிலே கோழி எப்படிக் கூவுகிறது தெரியுமா?”

பக்தர்கள் பலர், ‘கொக்கரக்கோ’ என்று குரல் எழுப்ப, கை அசைத்து நிறுத்தச் சொல்லிவிட்டு பேசத்தொடங்குகிறார், மகான்.

அது, கொக்கரக்கோ என்று இல்லை, கொக்கறுகோ என்று கூவுகிறது. கொக்கு என்றால் மாமரம் என்று ஓர் அர்த்தம் உண்டு. கோ என்றால் தலைவன். மாமரமாக நின்ற சூரனை அறுத்துத் தள்ளியவர் என்பதால், மாமரத்தை அறுத்த தலைவனே! என்பதாக கொக்கறுகோ என்று தினம் தினம் விழித்தெழும் வேளையில் அந்தக் கந்தவேளைக் கூவிக் கும்பிடுகிறது!”

இனி கோழி கூவும் போதெல்லாம் குமரனை நினைப்பீர்கள்தானே!

(பிரசாதம் மணக்கும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *