மகா(ன்)பிரசாதம்! – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle

Spread the love

மகா(ன்)பிரசாதம்!

-ஜெயாப்ரியன்

ஸ்ரீமடத்துல பக்தர்கள் எல்லாம் கூடியிருந்த ஒருநாள். பூஜையை முடிச்சுட்டு யதா ஸ்தானத்துக்கு வந்து உட்கார்ந்த மகான், எல்லாரையும் பார்த்து பேச ஆரம்பிச்சார்.

“இந்த லோகத்துல சுவாமியால கொடுக்க முடியாத விஷயம் எதாவது உண்டா?” எல்லோரும் நெற்றி சுருக்கி யோசிக்க, மகானே தொடர்ந்தார்.

 “பகவான் முடியாததே இல்லைன்னு தெரிஞ்சே இப்படி ஒரு கேள்வியை ஏன் கேட்கறேன்னு தோணறது இல்லையா? ஆனா, பகவானால  முடியாத காரியம் ஒண்ணு இருக்கு..!

புரியலை இல்லையா? போதும்னு திருப்தியா ஒருத்தரை சொல்ல வைக்கறது சுவாமியால கூட முடியாது. ஏன்னா, எதைக் கொடுத்தாலும் இன்னொண்ணைக் கேட்கும் மனசு.

இது கிடைச்சுட்டா, அடுத்தது…அதுவும் கிடைச்சுட்டா இன்னொண்ணு இப்படி மனசு கேட்டுண்டே இருக்கும்!” சொன்ன மகான் சில விநாடி நிறுத்திட்டு தொடர்ந்தார்.

 “பகவானால முடியாத காரியத்தை மனுஷாளால செய்ய முடியும் தெரியுமோ?”

இப்போதான் சலசலப்பே அதீதமாச்சு… இது என்ன பெரியவா இப்படிச் சொல்றார்?’னு. சட்டுன்னு ஒரு சொடுக்குப் போட்டார் மகான். கூட்டம் நிசப்தம் ஆக, அவர் பேச ஆரம்பிச்சார்.

“ஒருத்தரை போதும் போதும்னு சொல்ல வைக்க மனுஷாளால முடியும். அதுக்கு அவரை உட்கார வைச்சு வயிறார அன்னமிடணும். அன்னத்தை சாப்பிடறபோது மட்டும்தான் ஒரு மனுஷனுக்கு திருப்திங்கற எண்ணம் வரும். குறிப்பிட்ட அளவுக்கு மேல சாப்பிட முடியாது. திருப்த்யோஸ்மின்னு (போதும் திருப்தி ஆயிடுத்து)ன்னு சொல்லித்தான் ஆகணும்.

எவன் தனக்காக மட்டுமே ஆகாரத்தை தேடிக்கறானோ, தனக்கு மட்டும்னு சாப்பிடறானோ அவனோட கர்மாவை முழுக்க முழுக்க அவன் சுமந்துதான் ஆகணும் அப்படின்னு பகவான் கிருஷ்ணரே சொல்லியிருக்கார்.

தான வள்ளலான கர்ணனே கூட அன்னதானம் செய்யாததால சொர்க்கத்துக்குப் போகமுடியலை. அப்புறம் கணக்குப் பார்த்து, அன்னதானம் செய்யற இடத்தை சுட்டிக்காட்டின புண்ணியத்தால சொர்க்கத்துக்குப் போக முடிஞ்சுதுன்னெல்லாம் புராணக்கதை உண்டு.

சுவாமிக்கு நைவேத்யம் செய்யறதால மட்டும் அது பிரசாதம் ஆகிடறது இல்லை. அதைப் பிறருக்கு விநியோகமும் செய்யும்போதுதான் அது முழுமையா பிறர்சாதம் அதாவது பிரசாதம் ஆகறது.

உங்களால இயன்ற அளவுல ஒரே ஒருத்தருக்காவது, மாசத்துல ஒருதடவையாவது அன்னதானம் செய்யணும். இப்படி செய்யச் செய்ய உங்க வாழ்க்கைல தானாவே எல்லா சுகமும் நிறைஞ்சு மணக்கும்.

’அன்னதாதா சுகி பவ’ன்னு அதைத்தான் வேதம் சொல்றது.”

(பிரசாதம் மணக்கும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *