மகாராஷ்டிரத்தை உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ. 29 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) தொடக்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதில் மகாராஷ்டிரம் பெரும் பங்கு வகிக்கிறது. தொழில்துறை, விவசாயம், நிதித் துறையிலும் மகாராஷ்டிரம் வலிமையாக உள்ளது.
நாட்டின் நிதி நகரான மும்பையை உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாற்ற இவை உதவும். வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மகாராஷ்டிரத்தை மாற்றுவதே குறிக்கோள்.
சிறிய மற்றும் பெரிய முதலீட்டார்கள் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை வரவேற்றுள்ளனர். உறுதியான நிலைத்தன்மையை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும் என மக்கள் நம்புகின்றனர். மூன்றாவது முறை ஆட்சியில் மூன்று மடங்கு வேகமாக உழைப்போம் என பதவியேற்கும்போது கூறினேன். அது நடப்பதை இப்போது கண்கூட பார்க்கிறோம்.
தற்போது தொடக்கிவைக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இணைக்க உதவும். மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வேலைவாய்ப்பையும் இத்திட்டங்கள் கொண்டுவரும் எனக் குறிப்பிட்டார் மோடி.