மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.
மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவ. 13, 20 என இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனைக் கட்சி (உத்தவ் பிரிவு) மகா விகாஸ் அகாதி கூட்டணி முயற்சிக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!
பேரவைத் தேர்தல்
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக 99 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.