மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு குழுக்களை அமைத்து பணியாற்றி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மக்களை நேரடியாகச் சந்தித்து பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரம் பாஜகவின் வெற்றிக்குக் கைகொடுத்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் அலையை உருவாக்கும் பணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இது குறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழுவும் 5 முதல் 10 பேரைச் சந்திக்கிறது. இந்தக் கூட்டங்களின்போது இக்குழுவினர் வெளிப்படையாக பாஜகவை ஆதரித்துப் பேசுவதில்லை. மாறாக, தேசிய நலன் சார்ந்த விவகாரங்கள், ஹிந்துத்துவம், நல்லாட்சி, வளர்ச்சி, மக்களின் நலவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களையும் உள்ளூர் பிரச்னைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டுகின்றனர்.
இந்தக் குழுக்களை அமைப்பதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. ஏற்கெனவே ஹரியாணா முழுவதும் ஆர்எஸ்எஸ் தன் கிளை அமைப்புகளுடன் நடத்திய கூட்டங்கள் அந்த மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.