`மகாராஷ்டிராவை வலுப்படுத்த டிரம்ப் போன்ற ஒருவருக்குகூட ஆதரவளிக்க தயங்க மாட்டேன்’- ராஜ் தாக்கரே

Spread the love

மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே தேர்தல் கூட்டணியில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரது கட்சியும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேர்தல் தோல்வி பயத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இத்தேர்தல் கூட்டணி குறித்து ராஜ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில்,”‘மராத்தி மக்களின் நலன், மராத்தி மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, மற்றும் ஒரு வலிமையான மகாராஷ்டிரா ஆகியவையே எனக்கு மிகவும் முக்கியம்.

அரசியலில் வலைந்து கொடுக்கிறோம் என்பதற்காக கொள்கையில் சமரசம் செய்து கொண்டதாக அர்த்தமாகாது. மகாராஷ்டிரா வலுவாக இருக்கவேண்டும் என்பதற்காக டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒருவருக்கு கூட ஆதரவு கொடுக்க தயங்க மாட்டேன்.

ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, நோக்கம் ‘தெளிவாகவும் தூய்மையாகவும்’ இருக்கும் வரை, அதற்காக எந்த முறையையும் பயன்படுத்தலாம்”என்றார்.

மராத்தி மொழியைச் செம்மொழியாக அறிவித்ததன் பின்னணியில் உள்ள மத்திய அரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ராஜ் தாக்கரே, அந்த மொழிக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். செம்மொழியாக அறிவித்துவிட்டு அதன் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. சமஸ்கிருதத்திற்காக கணிசமான நிதி செலவிடப்படுகிறது. தொடர்ச்சியான நிதி ஆதரவு இல்லாமல் ஒரு மொழி உயிர்வாழவோ அல்லது வளரவோ முடியாது என்று கூறினார்.

உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி அமைத்தது குறித்து கூறுகையில், _`

இந்த கூட்டணி மராத்தியர்களை மட்டுமே மையமாகக் கொண்டது. அதற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. இது மாநில அல்லது மத்திய அளவில் ஒரு கூட்டணியாக மாறும் என்று கருதுவது தவறானது. ஏனெனில் தேர்தல் கூட்டணிகள் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். மகாராஷ்டிராவை வலுப்படுத்த உதவும் என்றால், டிரம்ப் போன்ற ஒருவருக்கு ஆதரவளிக்கக்கூட எனக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.

அரசியல் அடையாளங்களை விட மாநிலத்தின் நலன்களே எனக்கு முக்கியம். தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தாலும், மராத்தி அடையாளம் குறித்த எனது கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்வேன். நான் முழுமையான மராட்டியன். இந்த விஷயத்தில் நான் பின்வாங்கமாட்டேன்”என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *