விதர்பாவில் பா.ஜ.கவிற்கு பின்னடைவு
பா.ஜ.கவுக்கு மிகவும் செல்வாக்குள்ள விதர்பா பிராந்தியத்தில் பா.ஜ.கவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சந்திராப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 நகராட்சிகளில் 7 நகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் வெற்றியை பா.ஜ.கவால் தடுக்க முடியவில்லை. அமராவதி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 நகராட்சிகளில் பா.ஜ.க 6 நகராட்சிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதேசமயம் கட்சிரோலி மாவட்டத்தில் பா.ஜ.க முழுமையாக வெற்றி பெற்று இருக்கிறது. இதே போன்று மேற்கு மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 33 நகராட்சிகளில் 14 நகராட்சியில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
பா.ஜ.கவின் வெற்றியை தடுக்க கோலாப்பூர், சாங்கிலி, சோலாப்பூர், சதாரா மாவட்டத்தில் இதர கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டன. மராத்வாடாவில் உள்ள பார்லி நகராட்சியை பா.ஜ.கவும் தேசியவாத காங்கிரஸும் சேர்ந்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளன. இத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் தனஞ்சே முண்டே மற்றும் அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் சேர்ந்து பிரசாரம் செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் சவானின் சொந்த மாவட்டமான நாண்டெட்டில் பா.ஜ.க பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.
இது அசோக் சவானுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பு அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். மக்களவை தேர்தலில் நாண்டெட் தொகுதியில் பா.ஜ.க தோல்வியை சந்தித்தது. கொங்கன் பகுதியில் சிவசேனா செல்வாக்காக இருந்த பல பகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!