மகாராஷ்டிரா: கொலை வழக்கில் சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற கேங்க்ஸ்டரின் இரு உறவுக்கார பெண்கள் | Two female relatives of a gangster who won the election while in jail on a murder charge

Spread the love

புனே மாநகராட்சித் தேர்தலில் கேங்க்ஸ்டர் பாண்டு ஆண்டேகரின் உறவுக்கார மகளிர் சிறையில் இருந்து கொண்டே போட்டியிட்டனர்.

பாண்டு ஆண்டேகரின் மருமகள் சோனாலி மற்றும் மைத்துனி லட்சுமி ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் தனது கட்சி சார்பாக புனே மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்தார்.

இதற்கு பா.ஜ.க உட்பட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் விமர்சனங்களைத் தாண்டி இத்தேர்தலில் இரு மகளிரும் வெற்றி பெற்றுள்ளனர்.

சோனாலி முன்னாள் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர் வன்ராஜ் ஆண்டேகரின் மனைவியாவார். வன்ராஜ் ஆண்டேகர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். வன்ராஜ் சகோதரிகளில் ஒருவரின் கணவரான கணேஷ் கோம்கர் இக்கொலையைச் செய்தார்.

வன்ராஜ் படுகொலைக்குப் பழிக்குப் பழியாக கடந்த ஆண்டு கணேஷ் கோம்கரின் 19 வயது மகன் ஆயுஷ் படுகொலை செய்யப்பட்டார். ஆயுஷ் கோம்கர் கொலை வழக்கில் பாண்டு ஆண்டேகர், அவரது மகன் கிருஷ்ணா ஆண்டேகர், சோனாலி ஆண்டேகர், லட்சுமி ஆண்டேகர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

சோனாலி மற்றும் லட்சுமி ஆகியோர் சிறையில் இருந்தபோதிலும், இருவருக்கும் அஜித்பவார் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். தேர்தலில் கடும் போட்டி நிலவியது.

அஜித்பவார்

அஜித்பவார்

இதில் சோனாலி ஆண்டேகர், முன்னாள் எம்எல்ஏ-வும், சிவசேனா தலைவருமான ரவீந்திர தங்கேகரின் மனைவி பிரதீபா தங்கேகரைத் தோற்கடித்தார். அதே நேரத்தில் லட்சுமி ஆண்டேகர் பாஜக வேட்பாளர் ருதுஜா கடலேவை மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இது குறித்து ஆண்டேகர் குடும்பத்திற்கு நெருக்கமான வழக்கறிஞர் மிதுன் சவான் கூறுகையில், “‘ஆண்டேகர்களுக்கு நீண்ட அரசியல் அனுபவம் உண்டு. வத்சலா ஆண்டேகர் நகரில் மேயராகப் பணியாற்றியவர். மறைந்த உத்யன்காந்த் ஆண்டேகர் மற்றும் வன்ராஜ் ஆண்டேகர் ஆகியோர் மக்கள் பிரச்னைகளை எழுப்புவதில் மிகவும் சிறந்து விளங்கினர்” என்று கூறினார்.

பெங்களூருவில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கடந்த 2017ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் என்பவர் ஜல்னா மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு பா.ஜ.க வேட்பாளர் ராவ்சாஹேப் என்பவரைத் தோற்கடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *