சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைக்கும் விழாவிற்கு அதானியே தனது மனைவியோடு நேரில் வந்திருந்தார். பாராமதி விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானத்தில் அதானி தனது மனைவியோடு வந்தபோது அவரை அஜித்பவாரும், சரத்பவாரின் பேரன் ரோஹித் பவாரும் சேர்ந்து வரவேற்றனர்.
அதானி தம்பதி பின் இருக்கையில் அமர்ந்து வர ரோஹித் பவார் கார் ஓட்டினார். அஜித்பவார் அவர் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் நடந்த ஏ.ஐ. சென்டர் திறப்பு விழாவில் சரத்பவாரோடு அவரது மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். விழாவில் இரண்டு பவார் குடும்பங்களும் முழுமையாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் சுப்ரியா சுலே அதானி மனைவியைக் கௌரவிப்பதாக இருந்தது. ஆனால் சுப்ரியாவே முன்வந்து அஜித்பவார் மனைவி சுனேதிர பவாரிடம் சொல்லி அதானி மனைவி பிரீத்தி அதானியைக் கௌரவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதில் பேசிய சுப்ரியா சுலே, அதானி குடும்பத்திற்கும் பவார் குடும்பத்திற்கும் இடையேயான உறவு 30 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.
விழாவில் பேசிய அதானி, சரத்பவாரை தனது வழிகாட்டி என்றும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான சரத்பவாரின் தொலைநோக்கு பார்வை மற்றும் பங்களிப்பு அபரீதமானது என்றும் பாராட்டினார்.
விழா முடிந்த பிறகு அதானி தம்பதியை சரத்பவார் தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுடன் அஜித்பவாரும் சென்றார். அவர்கள் அனைவருக்கும் சரத்பவார் தனது இல்லத்தில் விருந்து கொடுத்து கௌரவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு இரண்டு தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.