மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தல்: "MP, MLAக்களின் உறவினர்கள் வென்றால் பதவி கிடைக்காது" – பாஜக உறுதி

Spread the love

மகாராஷ்டிராவில் வரும் 15ம் தேதி நடைபெறும் மாநகராட்சித் தேர்தலில் பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் வாரிசுகள், உறவினர்கள் போட்டியிடுகின்றனர்.

அது போன்ற வாரிசுகளுக்கு மாநகராட்சியில் எந்தப் பதவியும் கொடுக்க மாட்டோம் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்களின் உறவினர்களுக்கு சீட் வழங்கக்கூடாது என்று கட்சி சமீபத்தில் தீர்மானித்தது.

உள்ளாட்சித் தேர்தல் செயல்முறை தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முடிந்தவரை இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

ஆனால் ஜல்காவ் மாநகராட்சி வார்டு 7ல் ஜல்காவ் எம்.எல்.ஏ. சுரேஷ் போலேயின் மகன் விஷால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதோடு மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அல்லது எம்.பி.க்களின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரவீந்திர சவானிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதிகள் பயன்படுத்தப்பட்டன. எம்.எல்.ஏ தேவயானி பாரண்டேவின் மகன் அஜிங்க்யா பாரண்டே மற்றும் எம்.எல்.ஏ சீமா ஹிரேயின் மகள் ராஷ்மி ஹிரே ஆகியோர் கட்சியின் உத்தரவுக்குப் பிறகு தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

மகாராஷ்டிரா தேர்தல்
மகாராஷ்டிரா தேர்தல்

இருப்பினும், இந்த உத்தரவு சில மாநகராட்சி அமைப்புகளில் சரியான நேரத்தில் சென்றடையவில்லை. இதன் விளைவாக சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் சிலர் போட்டியில் இருக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் கூட, அந்தந்த மாநகராட்சிகளில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி அவர்களுக்கு எந்தப் பதவியையும் வழங்காது” என்று அவர் கூறினார்.

ரவீந்திர சவானின் இக்கருத்து பா.ஜ.க தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

புனேயில் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 21 கவுன்சிலர்கள் இந்தத் தேர்தலில் கட்சி மாறி அதே வார்டில் வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று புனே மற்றும் சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் சரத்பவார் மற்றும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து வெவ்வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *