“இது பலருக்கும் இருக்கும் பிரச்னைதான். மறுநாள் வேலைக்குப் போகவேண்டும். சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கும். அவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
காஞ்சி மகாபெரியவர் லிங்கம் – லிங்கோற்பவம் குறித்து மிக அற்புதமாக விவரிக்கிறார் “லிங்கம் ஏன் வட்டமாக இருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத் தான் அடி-முடி இல்லை. ஆதியில்லை; அந்தமும் இல்லை. மற்றவற்றுக்கு உண்டு. முக்கோணத்துக்கும் சதுரத்துக்கும் உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.
சரியான வட்டமாக (Circle) இல்லாமல், லிங்கம் நீள்வட்டமாக (ellipse) இருக்கிறது. `பிரபஞ்சமே ‘எலிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக்கொண்டாலும் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது’ என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரமாண்டமும், ‘ஆவிஸ்புரத்’ என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது.
யாராவது பந்துவை நினைக்கிறோம். உடனே சந்தோஷமாயிருக்கிறது. ஆனால், அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஓர் உருவத்தோடு வந்து அனுக்கிரகம் பண்ணி னால்தான் ரொம்ப சந்தோஷ மாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும்.
உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு, உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம்! அதற்காகவே உருவமற்ற பரமேஸ்வரன் அருவுருவமான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்ய ரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். அடிமுடி எல்லை இல்லாமல் ஜ்யோதி ஸ்வரூபமாக – ஜ்யோதிர் லிங்கமாக, ஆகாயத் துக்கும் பூமிக்குமாகப் பரம சிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்!’’ என்பது காஞ்சிமுனிவரின் திருவாக்கு.
இத்தகு அற்புத வடிவான லிங்கோத்பவ மூர்த்தியை மகாசிவராத்திரி அன்று வழிபடுவதால் சகல இன்பங்களும் வாய்க்கும்; செல்வமும் செல்வாக்கும் பொங்கிப்பெருகும் என்கின்றன ஞானநூல்கள்.
லிங்கோத்பவ காலத்தில் நமக்குப் பிரபஞ்ச சக்தி மிகவும் சமீபமாக இருக்கும். அப்போது நாம் விழித்திருந்து நிமிர்ந்து அமர்ந்திருந்தாலே நமக்குள் அந்த சக்தி நிறையும். அப்படி நிறையும் சக்தி வரும் ஆண்டு முழுவதும் நம் வாழ்வை வளமாக்கும். எனவே லிங்கோத்பவ காலத்தில் விழித்திருக்க முயலுங்கள்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் அனைவரும் அந்த மகேஸ்வரனை நன்கு வழிபட்டு சகலவிதமான நற்பலன்களையும் அடைவோம்.
அனைவருக்கும் மகாசிவரத்திரி நல்வாழ்த்துகள்.