2025 மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினம் தான் மகா சிவராத்திரி.
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரியானது எல்லா வகையான நலனும் ஒருசேர நமக்கு வழங்குவதால் இது மகா சிவராத்திரி எனப் போற்றப்படுகிறது. ‘சிவ’ என்ற சொல் ‘மங்களம்’ என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்பதாகும். சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகா சிவராத்திரி விரதமே மிகப்பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி எங்கெல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
வாரணாசி காசி விஸ்வநாதர்
இந்தியாவின் முக்கிய ஆன்மிக இடமாக விளங்கும் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். காங்கை ஆரத்தி மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.
ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ்
புனித கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷிகேஷில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு. அங்குள்ள நீலகண்ட மகாதேவ் கோயிலில் மகா சிவராத்திரியன்று சிவ பக்தர்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. கங்கையில் புனித நீராடி அங்குள்ள ஹர் கி பௌரி, தக்ஷேஷ்வர் மகாதேவ் மற்றும் நீலகண்ட மகாதேவ் போன்ற கோயில்களுக்குச் சென்று இரவு முழுவதும் நடைபெறும் சிறப்புப் பூஜை, பஜனைகளில் பங்கேற்கின்றனர்.